டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்

இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி20 கேப்டன்: பாண்டியாவை பின்தள்ளிய சூர்யகுமார்
Published on
Updated on
2 min read

புது தில்லி: இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அந்தப் பொறுப்புக்கு ஹர்திக் பாண்டியா பரிசீலிக்கப்பட்ட நிலையில், நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவை டி20 கேப்டனாக நியமிப்பதென அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இலங்கை அணியுடன் மோதுகிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பையில் சாம்பியனான கையோடு, அந்த ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். இதையடுத்து திறமையான கேப்டனை நியமிக்கும் பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு இருந்தது.

இந்நிலையில், இலங்கை பயணத்தின்போது டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கலாம் என பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ரோஹித் கேப்டனாக இருந்தபோது, பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் ஓய்வுக்குப் பிறகு, பாண்டியா டி20 அணிக்கு தலைமை ஏற்க முழு தகுதியுடன் இருக்கிறார். ஆனால் சூர்யகுமார் யாதவ் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவராக இருப்பார் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கருதுகின்றனர்.

இதை பாண்டியாவிடமும் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தெரிவித்துவிட்டனர். அணியில் உறுதித்தன்மையை நிலைக்கச் செய்ய, நீண்டகால அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, 2026 டி20 உலகக் கோப்பை போட்டி வரை அந்த ஃபார்மட்டில் சூர்யகுமார் யாதவே கேப்டனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அணியினரிடையேயும் சூர்யகுமாருக்கு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது' என்றன.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 8 டி20 ஆட்டங்களில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட்டது நினைவுகூரத்தக்கது.

டி20 தொடருக்கு சூர்யகுமார் கேப்டனாக இருக்கும் நிலையில், அவருக்கான துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியா - இலங்கை மோதும் டி20 தொடர், ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லெகெலெவில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடர்: ரோஹித், கோலி, பும்ரா இல்லை?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டர் விராட் கோலி, பெளலர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பங்கேற்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டி தொடக்கம் முதல் தொடர்ந்து 3 மாதங்களாக விளையாடி வந்ததால், தங்களுக்கு நீண்டதொரு ஓய்வு தேவை என்று அவர்கள் பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை ரோஹித், கோலி, பும்ரா ஆகியோர் தவிர்க்க முடியாத தேர்வாக இருக்கிறார்கள். எனினும், தொடர்ந்து விளையாடி வரும் அவர்கள், 3 ஆட்டங்களுக்காக இலங்கை செல்ல வேண்டிய தேவையில்லை.

அடுத்த சில மாதங்கள் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் விளையாட இருப்பதால், அதில் அவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். எனவே, அதற்கு முன்பு அவர்களுக்கான ஓய்வு தேவைப்படுகிறது. செப்டம்பர் முதல் ஜனவரி வரை இந்தியா 10 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.

எனினும், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் பயிற்சி தேவையாக இருக்கும். அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் அவர்களுக்கு உதவும்' என்று அந்த வட்டாரங்கள் கூறின.

பாண்டியாவும் இல்லை: இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியாவும் விலகியிருக்கிறார்.

ரோஹித் இல்லாத நிலையில், தற்போது பாண்டியாவும் ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு எடுப்பதால், அந்தத் தொடருக்கான கேப்டன் பொறுப்புக்கு கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஆகிய இருவரும் போட்டியில் இருக்கின்றனர். இதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் பிரதான தேர்வாக இருக்க வாய்ப்புள்ளது.

இலங்கையுடன் இந்தியா மோதும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

கம்பீரின் புதிய பயணம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கெளதம் கம்பீருக்கு, இலங்கை பயணமே முதல் பணியாகும். இது கம்பீருக்கு எளிதான தொடக்கமாக இருந்தாலும், தொடர்ந்து வரும் போட்டிகள் அவருக்கு சவால் அளிக்கக் கூடியவையாக இருக்கும் என்பதால், அதற்கான தகுந்த தடத்தை அமைக்கவும், இந்திய அணியினர் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தவும் இந்தத் தொடர் உதவும்.

ஏனெனில், முதலில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட இருக்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் கம்பீருக்கான அமிலச் சோதனையாக இருக்கும். கடந்த 4 முறையுமே இந்தியா இந்தத் தொடரை தன் வசப்படுத்தியிருக்கிறது. மேலும், கடந்த 33 ஆண்டுகளில் முதல் முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்தத் தொடரில் 5 டெஸ்ட்டுகள் விளையாடப்படவுள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இரு முறை தோல்வி கண்ட இந்தியாவை, இந்த முறை கோப்பை வெல்லச் செய்வது கம்பீருக்கான பிரதான இலக்காக இருக்கலாம்.

அதேபோல், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியும் அவருக்கான பலப்பரீட்சையாக இருக்கும். பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் அந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை எப்போதும் விரும்புபவராகவே கம்பீர் இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com