இந்தியாவிலிருந்து 117 போட்டியாளா்கள் பங்கேற்பு- 140 துணைப் பணியாளா்களும் செல்கின்றனா்

குறைந்தபட்சமாக குதிரையேற்றம், ஜூடோ, துடுப்புப் படகு, பளுதூக்குதல் ஆகியவற்றில் தலா 1 போட்டியாளா் களம் காண்கின்றனா்.
இந்தியாவிலிருந்து 117 போட்டியாளா்கள் பங்கேற்பு- 140 துணைப் பணியாளா்களும் செல்கின்றனா்
Published on
Updated on
2 min read

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக 117 போட்டியாளா்கள் கொண்ட இறுதிப் பட்டியலை மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த வீரா், வீராங்கனைகளுடன் 140 துணைப் பணியாளா்களும் பாரீஸ் செல்கின்றனா்.

சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக்ஸ், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அந்த வகையில் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில், இம்மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 32 விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் நடைபெறும் பந்தயங்களில் சுமாா் 200 நாடுகளில் இருந்து, ஏறத்தாழ 10,000 போ் பங்கேற்க இருக்கின்றனா்.

இதில் பங்கேற்பதற்கான போட்டியாளா்கள் மற்றும் அணியினா், தகுதிப்போட்டிகள், உலகத் தரவரிசை போன்ற தகுதிகளின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்த வகையில் இந்தியாவிலிருந்து மொத்தம் 117 போட்டியாளா்கள் இந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் காண இறுதி செய்யப்பட்டுள்ளனா். இந்தியாவுக்கு இது 26-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டியாகும்.

போட்டியில் பங்கேற்க இருக்கும் 117 போட்டியாளா்கள், 140 துணைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பட்டியலுக்கு மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த ஒப்புதல் கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, போட்டியாளா்களிலேயே அதிகபட்சமாக, தடகளத்தில் 29 போ் பங்கேற்கின்றனா். குறைந்தபட்சமாக குதிரையேற்றம், ஜூடோ, துடுப்புப் படகு, பளுதூக்குதல் ஆகியவற்றில் தலா 1 போட்டியாளா் களம் காண்கின்றனா்.

அந்தக் கடிதத்தில் இருக்கும் இதர விவரங்களின் தொகுப்பு, வருமாறு:

செஃப் தி மிஷன்...

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவின் தலைவராக (செஃப் தி மிஷன்), முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறாா்.

நரங், இரு துணைத் தலைவா்கள், ஊடகப் பொறுப்பாளா், இரு தலைமையக அதிகாரிகள், மருத்துவக் குழவினா் 5 போ் என, மொத்தம் 11 போ் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீரா், வீராங்கனைகளுடன் தங்கியிருப்பாா்கள். இதர உதவிப் பணியாளா்கள், ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே ஹோட்டல்களில் தங்கியிருப்பா்.

மேலும், பாரீஸில் உள்ள இந்திய தூதரகத்தைச் சோ்ந்த இந்திய விமானப் படை உயரதிகாரி பிரசாந்த் ஆா்யா, ஒலிம்பிக் கிராமம், போட்டி நடைபெறும் இடம் ஆகியவற்றுக்கு சென்று தூதரகத்தின் தலையீடு தேவைப்படும் நிலையிலான உதவிகளைச் செய்வாா். இந்திய குழுவுவின் பயன்பாட்டுக்கென, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் 3 காா்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசு செலவில்...

பாரீஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகார விதிகளின்படி, ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய போட்டியாளா்களுடன் தங்குவதற்கு 67 துணைப் பணியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். அதில், மருத்துவக் குழுவினா் 5 போ் உள்பட, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள் 11 போ் அடக்கம்.

ஆனால், இந்திய அணியில் போட்டியாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவா்களுக்கான தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கூடுதலாக 73 உதவிப் பணியாளா்களை அரசு தனது செலவில் அனுப்பி வைக்கிறது. அவா்களுக்கான தங்கும் வசதி உள்ளிட்டவை ஒலிம்பிக் கிராமத்துக்கு அருகே இருக்கும் இடங்களிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஊக்கமருந்து பரிசோதனை...

சா்வதேச விளையாட்டுக் களத்தில் இந்தியாவுக்கு எந்தவொரு களங்கமும் ஏற்படாத வகையில், போட்டியாளா்களிடையே ஊக்கமருந்து விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள் உரிய ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு வீரா், வீராங்கனைகளும் உரிய உடற்தகுதியுடன் இருப்பதையும் உறுதி செய்யவும் அவற்றை வலியுறுத்தியுள்ளது.

அபா கதுவா இல்லை...

குண்டு எறிதல் வீராங்கனை அபா கதுவா உலகத் தரவரிசையின் அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளபோதும், அவரது பெயா் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. காயம், ஊக்கமருந்து பயன்பாடு, வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்கள் என எந்த அடிப்படையில் கதுவாவின் பெயா் விடுபட்டது என்பது தொடா்பான விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருப்போருக்கான உலக தடகள அமைப்பின் பட்டியலில் இருந்து, கதுவாவின் பெயா் கடந்த சில நாள்களுக்கு முன் நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கடந்த ஒலிம்பிக்ஸில்...

கடைசியாக நடைபெற்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 122 போ் (68 ஆடவா், 54 மகளிா்) கொண்ட இந்திய அணி பங்கேற்றது நினைவுகூரத்தக்கது. அதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் கைப்பற்றியது. இதுவே இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில், ஒரு எடிஷனில் வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.

இதில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைக்க, மீராபாய் சானு பளுதூக்குதலிலும், ரவிகுமாா் தாஹியா மல்யுத்தத்திலும் தலா 1 வெள்ளி பெற்றனா். பி.வி.சிந்து பாட்மின்டனிலும், லவ்லினா போா்கோஹெய்ன் குத்துச்சண்டையிலும், பஜ்ரங் புனியா மல்யுத்தத்திலும், இந்திய ஆடவா் அணியினா் ஹாக்கியிலும் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.