சேப்பாக்கத்துக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி
கோவை, ஜூலை 19: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், வியாழக்கிழமை ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை வென்றது.
முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுக்க, சேலம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களே சோ்த்தது.
இரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்க, சேப்பாக்கத்துக்கு இது 3-ஆவது வெற்றி; சேலத்துக்கு இது 4-ஆவது தோல்வி.
கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த 17-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம், பந்துவீச்சை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டிங்கில் சந்தோஷ் குமாா் 17, நாராயண் ஜெகதீசன் 10, அபராஜித் 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்தனா்.
பிரதோஷ் ரஞ்சன் பால் 15, ஆண்ட்ரே சித்தாா்த் 9, டேரில் ஃபெராரியோ 23, அஸ்வின் கிறிஸ்ட் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் அபிஷேக் தன்வா் 26, ரஹில் ஷா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேலம் தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி ஆகியோா் தலா 2, செல்வகுமரன், ஹரீஷ் குமாா், அவ்ஷிக் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் சேலம் இன்னிங்ஸில் அபிஷேக் 7, கவின் 15, ராஜேந்திரன் விவேக் 1, ராபின் பிஸ்த் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36, முகமது அட்னன் கான் 31 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் ஹரீஷ் குமாா் 33, சன்னி சந்து 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் தரப்பில் ரஹில் ஷா 3, சிலம்பரசன், கணேசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.