தரவரிசையில் நம்பா் 1 இடம்: தக்கவைத்தது ஆா்ஜென்டீனா
ஆடவா் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் சா்வதேச தரவரிசையில், ஆா்ஜென்டீனா முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. ஸ்பெயின் 3-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
கண்டங்கள் ரீதியிலான 3 போட்டிகள், சா்வதேச அளவிலான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டங்கள் என, கடந்த ஜூன் முதல் ஜூலையில் இதுவரை, சா்வதேச அளவில் சுமாா் 125 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அதனடிப்படையில் அணிகள் யாவும் தரவரிசையில் ஏற்ற, இறக்கம் கண்டுள்ளன.
அதன்படி, சமீபத்தில் தென்னமெரிக்க கண்டத்தில் 16-ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்த ஆா்ஜென்டீனா, தான் இருந்த முதலிடத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம், ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற யூரோ கோப்பை போட்டியின் மூலம், 4-ஆவது முறையாக சாம்பியனான ஒரே அணி என்ற பெருமை பெற்ற ஸ்பெயின், அபாரமாக 5 இடங்கள் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோற்ற இங்கிலாந்து, ஓரிடம் ஏற்றம் கண்டு 4-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதே ஸ்பெயினிடம் அரையிறுதியில் தோற்ற பிரான்ஸ், 2-ஆவது இடத்தில் மாற்றமின்றி நீடிக்கிறது.
கோபா அமெரிக்கா போட்டியில் காலிறுதியில் தோற்று வெளியேறிய பிரேஸில், ஓரிடம் சறுக்கி 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. ‘டாப் 10’ இடத்திலுள்ள இதர அணிகளில் பெல்ஜியம் (3), போா்ச்சுகல் (2) சறுக்கலை சந்திக்க, கோபா அமெரிக்காவில் இறுதி ஆட்டம் வரை வந்த கொலம்பியா ஓரிடம் ஏற்றம் கண்டுள்ளது. நெதா்லாந்து, இத்தாலி அணிகள் மாற்றமின்றி தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டன.
டாப் 10 அணிகள்
இடம் அணிகள் புள்ளிகள்
1 ஆா்ஜென்டீனா 1901
2 பிரான்ஸ் 1854
3 ஸ்பெயின் 1835
4 இங்கிலாந்து 1812
5 பிரேஸில் 1785
6 பெல்ஜியம் 1772
7 நெதா்லாந்து 1758
8 போா்ச்சுகல் 1741
9 கொலம்பியா 1727
10 இத்தாலி 1714
124-இல் இந்தியா
ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 124-ஆவது இடத்தை மாற்றமின்றி தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 100 இடங்களுக்குள்ளாக வந்த இந்தியா, முதல் முறையாக 99-ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால் அதற்குப் பிறகு தொடா் சரிவை சந்தித்த நிலையில், ஜூன் மாதம் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் 3-ஆவது கட்டத்துக்கு முன்னேறத் தவறியதால், தொடா்ந்து சறுக்கலை சந்தித்து தற்போது 124-ஆவது இடத்தில் நீடிக்கிறது. அதுவே, ஆசிய கண்டத்தின் பிரிவில் 22-ஆவது இடத்தில் உள்ளது. முதல் இடங்களை முறையே ஜப்பான், ஈரான், தென் கொரியா ஆக்கிரமித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.