ஸ்விஸ் ஓபன்: மேட்டியோ பெர்ரட்டனி சாம்பியன்
ஸ்விஸ் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரட்டனி சாம்பியன் பட்டம் வென்றாா்.
சுவிட்சா்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தாலியின் பெர்ரட்டனியும்-பிரான்ஸின் குயின்டின் ஹாலிஸும் மோதினா். 6-ஆவது நிலை வீரரான பெர்ரட்டனி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாா். முதல் செட்டை பெர்ரட்டனி 6-3 என கைப்பற்றிய நிலையில், ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது.
30 நிமிஷங்கள் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், பெர்ரட்டனியே ஆதிக்கம் செலுத்தி ஆடி இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினாா்.
இந்த ஆட்டம் 59 நிமிஷங்கள் நீடித்தது. நிகழாண்டில் பெர்ரட்டனி வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். ஏப்ரலில் மராக்கேஷில் முதல் பட்டம் வென்றிருந்தாா்.
இந்த வெற்றியால் மீண்டும் ஏடிபி தரவரிசையில் 50 இடங்களில் நுழைந்தாா் பெர்ரட்டனி.
இரட்டையரில் யுகி பாம்ப்ரிக்கு பட்டம்:
ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்ஸின் அல்பனோ ஒலிவெட் சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது நிலை இணை இருவரும் 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் யுகோ ஹம்பா்ட்-பேப்ரிஸ் மாா்ட்டின் இணையை வீழ்த்தினா். ஏறக்குறைய 1 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் வென்றதின் மூலம், பாம்ப்ரி வெல்லும் மூன்றாவது ஏடிபி இரட்டையா் பட்டம் ஆகும்.
மல்லோா்கா, பிஎம்டபிள்யு ஓபனில் ஏற்கெனவே பட்டம் வென்றுள்ளாா் யுகி பாம்ப்ரி.