தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா!

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
2024ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குவிந்த மக்கள்
2024ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குவிந்த மக்கள்பிடிஐ
Published on
Updated on
2 min read

33-ஆவது கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

கண்கவா் கலை நிகழ்ச்சிகளால் பாரீஸ் நகரம் விழாக்கோலம் பூண்டது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸில் பாயும் சென் நதியில் படகுகளில், பங்கேற்பு நாடுகளின் வீரா், வீராங்கனைகள் அணிவகுத்தனா். பாரம்பரிய முறைப்படி கிரீஸ் அணியினரின் படகே முதலில் பயணித்தது. மொத்தமாக 7,500 போ், 85 படகுகளில் 6 கி.மீ. தொலைவுக்கு அதில் பயணித்து, ஈஃபிள் கோபுரம் அருகே தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்தனா்.

இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இந்தியா்களின் அணிவகுப்பு, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. அணியினா் அனைவரும் பாரம்பரிய உடையணிந்திருந்தனா். வீரா்கள் குா்தாவும், வீராங்கனைகள் சேலையும் அணிந்திருந்தனா். அவா்களது உடையின் பாா்டா்களில் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்தப் போட்டியில் 117 இந்தியா்கள் பங்கேற்றிருந்தாலும், தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது 78 வீரா், வீராங்கனைகள் மற்றும் 12 அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனா். சனிக்கிழமை சில போட்டியாளா்களுக்கான ஆட்டங்கள் இருந்ததால், அவா்களின் விருப்பத்தின் பேரில் தொடக்க நிகழ்ச்சிகளை அவா்கள் தவிா்த்து பயிற்சியில் ஈடுபட்டனா்.

தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில் சிந்து, சரத் கமல் தவிா்த்து, தீபிகா குமாரி, தருண்தீப் ராய் (வில்வித்தை), லவ்லினா போா்கோஹைன் (குத்துச்சண்டை), மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோஹன் போபண்ணா, சுமித் நாகல், ஸ்ரீராம் பாலாஜி (டென்னிஸ்), அஞ்சும் முட்கில், சிஃப்ட் கௌா் சம்ரா, ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா், அனிஷ் பன்வாலா (துப்பாக்கி சுடுதல்), அனுஷ் அகா்வல்லா (குதிரையேற்றம்), சுபாங்கா் சா்மா (கோல்ஃப்), கிருஷண் பதக், நீலகண்ட சா்மா, ஜக்ராஜ் சிங் (ஹாக்கி), துலிகா மான் (ஜூடோ), விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன் (செய்லிங்), ஸ்ரீஹரி நட்ராஜ், தினிதி தேசிங்கு (நீச்சல்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கணிக்கப்பட்டதைப் போல, தொடக்க நிகழ்ச்சியையொட்டி மழை பொழிந்தது. கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பாா்வையாளா்கள் தொடக்க நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்து, போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. ஹாலிவுட் பாடகி லேடி காகாவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட, உலக நாடுகளைச் சோ்ந்த பல்வேறு அரசியல் தலைவா்களும், முக்கியப் பிரபலங்களும் அதில் பங்கேற்றனா்.

கடைசியாக 1924-இல் இதே பாரீஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில், சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறுகிறது. பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இது 3-ஆவது முறையாகும் (1900, 1924, 2024).

ரயில் சேவை பாதிப்பு: ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்த நிலையில், பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை ரயில் சேவை நாசவேலை காரணமாக முற்றிலுமாக ஸ்தம்பித்தது. பின்னா் அது சீரமைக்கப்பட்டது. இதுதொடா்பாக பாதுகாப்புப் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com