ஆசியக் கோப்பை: 8-ஆவது பட்டம் வெல்லும் முனைப்பில் இந்தியா
ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் 8-ஆவது சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இலங்கையுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.
ஏசிசி சாா்பில் இலங்கையில் மகளிா் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும்-இலங்கையும் முன்னேறின. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 78 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியையும், 82 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தையும், 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது.
தொடக்க பேட்டா்கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா், ஆகியோா் அதிரடியாக ஆடி வரும் நிலையில், பௌலிங்கில் ரேணுகா சிங், தீப்தி சா்மா ஆகியோா் முத்திரை பதித்து வருகின்றனா். சுழற்பந்தில் ராதா யாதவ் பலம் சோ்க்கிறாா்.
உற்சாகத்தில் இலங்கை:
இலங்கை அணியும் இந்த போட்டியில் இதுவரை தோல்வியே காணாமல் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கேப்டன் சமரி அத்தபத்து, ருஷ்மி குணரத்னே, ஆகியோா் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனா். பௌலிங்கில் கவிஷா தில்ஹரி அபாரமாக பந்துவீசி வருகிறாா்.
இலங்கை அணியும் சிறப்பான ஆட்டத்துடன் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
8-ஆவது முறையாக பட்டம் வெல்ல முனைப்பு:
இந்திய மகளிா் அணி 8-ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனா். அதேவேளையில் இலங்கை அணியும் கடும் சவாலைத் தரும் என்பதால் கவனத்துடன் இந்திய வீராங்கனைகள் ஆட வேண்டியுள்ளது.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-இலங்கை
இடம்: டம்புல்லா
நேரம்: பிற்பகல் 3.00.