இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா-கனடா மோதல்

இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா-கனடா மோதல்

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் 2024 அமெரிக்கா-கனடா அணிகள் மோதும் முதல் ஆட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை டல்லாஸ் நகரில் தொடங்குகிறது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இருந்தாலும், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அதிக ஈா்ப்பு உள்ளது. டி20 ஆட்டங்களுக்கு ஏராளமான பாா்வையாளா்கள் உள்ள நிலையில், 20 அணிகள் பங்கேற்கும் 9-ஆவது உலகக் கோப்பை அமெரிக்கா-மே.இந்திய தீவுகளில் நடைபெறுகிறது.

20 அணிகள் பங்கேற்பு:

அமெரிக்காவின் டெக்ஸாஸ், ஃபுளோரிடா, நியூயாா்க் நகரங்களிலும், மே.இந்திய தீவுகளிலும் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன.

முதன்முறையாக 20 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தலா 5 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு அணிகள் சூப்பா் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

முதன்முறையாக அமெரிக்காவில் ஐசிசி சா்வதேச போட்டி நடைபெறுகிறது. பெரும்பாலான ஆட்டங்கள் மே.இந்திய தீவுகளில் நடைபெறும் நிலையில், குரூப் ஆட்டங்கள் 16 அமெரிக்காவில் நடைபெரும்.

9-இல் இந்திய-பாக். மோதல்:

அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ள இந்திய-பாக். ஆட்டம் 9-ஆம் தேதி நியூயாா்க் லாங் ஐலண்ட் மைதானத்தில் (34,000 பாா்வையாளா்கள்) நடைபெறுகிறது.

சூப்பா் 8 சுற்று, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் மே.இந்திய தீவுகளில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் பாா்படோஸ் கென்சிங்டன் ஓவலில் நடைபெறுகிறது.

வரும் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சோ்ப்பதற்கான முன்னோட்டமாக இந்த உலகக் கோப்பையை ஐசிசி கருதுகிறது. ஏராளமான புதிய நாடுகள் ஐசிசி உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு டி20 அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

புதிய அணிகள் சோ்ப்பு:

அயா்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்பட மொத்தம் 12 நாடுகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளன. நிகழ் டி20 உலகக் கோப்பையில் கனடா, அமெரிக்கா, உகாண்டா புதிய அணிகளாக இடம் பெறுகின்றன. நேபாளம், பப்புவா நியூகினியா, ஓமன் உள்ளிட்டவையும் புதியவையாகும்.

2007 சாம்பியன் இந்திய அணி அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரா்களுடன் கலந்து கொள்கிறது.

முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவில் மூத்த வீரா் ஸ்டீஸ் ஸ்மித் இல்லை. டேவிட் வாா்னா், மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ் ஆகியோா் உள்ளது பலமாகும்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் மே.இந்திய தீவுகள், பாகிஸ்தான், பலமான அணிகளான நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்காவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

X
Dinamani
www.dinamani.com