
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியில் ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து, தற்போது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியில் ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட, அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட வேண்டி அவரை அந்தப் பதவியில் நீடித்திருக்க சம்மதிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், தலைமைப் பயிற்சியாளர் பதவியைத் தாண்டி அவர் பல விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது பதவிக்காலத்தில் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக மற்ற வீரர்களும் மகிழ்ச்சியாக இருந்தோம் என்ற பதிலையே கூறுவார்கள்.
ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பானதாக இருந்தது. அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் நான் அறிமுகமானபோது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட். அவர் எனக்கு மிகப் பெரிய முன் மாதிரி. பல ஆண்டுகளாக அவர் விளையாடியதைப் பார்த்து வளர்ந்து வந்திருக்கிறேன். அணிக்காக அவரது பங்களிப்புகள் அளப்பரியது. கடினமான சூழல்களில் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ராகுல் டிராவிட் என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று (ஜூன் 5) நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.