
இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.
ஆளும் பாஜக சார்பில் கிழக்கு தில்லியின் எம்.பி.யாக பதவி வகித்த கௌதம் கம்பீர், கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக தீவிர அரசியலில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ளார்.
இந்த நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கௌதம் கம்பீர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கம்பீர் பதிவிட்டிருப்பதாவது: அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துவார் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் நிறைவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. துபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியை வழிநடத்துவதற்கான விருப்பம் இருப்பதாக கம்பீரும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.