நிகோலஸ் பூரன் அதிரடி: மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

நிகோலஸ் பூரன் அதிரடி: மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி
Published on
Updated on
2 min read

கிராஸ் ஐலெட்: டி20 உலகக் கோப்பை போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

இத்துடன் நடப்பு உலகக் கோப்பை போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களில் நிகோலஸ் பூரன் 53 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் ஆனார். ஜான்சன் சார்லஸýம் அவருக்குத் துணை நின்றதில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பெளலிங்கில் ஆபெட் மெக்காய் பலம் காட்டினார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸை தொடங்கியோரில் பிராண்டன் கிங் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு வெளியேறினார்.

உடன் வந்த ஜான் சார்லஸýடன் இணைந்தார், 3-ஆவது பேட்டரான நிகோலஸ் பூரன். ஆப்கானிஸ்தான் பெளலிங்கை சிதறடித்த இந்த பார்ட்னர்ஷிப், 2-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

இதில் முதலில் சார்லஸ் ஆட்டமிழந்தார். 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு அவர் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் பூரன் தனது அதிரடியை தொடர்ந்தார்.

4-ஆவது பேட்டராக வந்த ஷாய் ஹோப் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களுக்கு நடையைக்கட்டினார். தொடர்ந்து வந்த கேப்டன் ரோவ்மென் பவெல், பூரனுடன் இணைய, 4-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்த்தது.

இதில் பவெல் 15 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை அதிரடியாக ரன்கள் குவித்த பூரன், கடைசி விக்கெட்டாக சரிந்தார்.

53 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 98 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் வீழ்ந்தார். ஓவர்கள் முடிவில் ஆண்ட்ரே ரஸ்ùஸல் 3, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் பெளலிங்கில் குல்பதின் நயிப் 2, நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 219 ரன்களை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில், இப்ராஹிம் ஜர்தான் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

அடுத்தபடியாக அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 0, குல்பதின் நயீப் 1 பவுண்டரியுடன் 7, நஜிபுல்லா ஜர்தான் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

முகமது நபி 1, கரிம் ஜனத் 1 சிக்ஸருடன் 14, கேப்டன் ரஷீத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, நூர் அகமது 2, நவீன் உல் ஹக் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். முடிவில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆபெட் மெக்காய் 3, அகீல் ஹுசைன், குடாகேஷ் மோட்டி ஆகியோர் தலா 2, ஆண்ட்ரே ரஸ்ùஸல், அல்ஜாரி ஜோசஃப் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

218

இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சேர்த்த 218 ரன்களே, நடப்பு உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணியால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். அதேபோல், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகளின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.

92/1

மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸில், பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்திருந்தது. ஆடவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.

36

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில், நிகோலஸ் பூரன் பேட்டிங்கின்போது அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய 4-ஆவது ஓவரில் 36 ரன்கள் கிடைத்தது.

இந்த ஓவரில் 6, நோபால் (5), வைடு (5), 0, லெக் பைஸ் (4), 4, 6, 6 என்ற வகையில் 36 ரன்கள் சேர்ந்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் பேட்டரின் விளாசல், பெளலரின் பிழை என 36 ரன்கள் சேர்க்கப்பட்டது இது 2-ஆவது முறையாகும்.

இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் இதே ப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில், கரிம் ஜனத் வீசிய 20-ஆவது ஓவரில் இந்தியாவின் ரோஹித் சர்மா, ரிங்கு சிங் பேட் செய்தபோது இவ்வாறு 36 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரில் 4, நோபால் (7), 6, 1, 6, 6, 6 என்ற வகையில் ரன்கள் கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com