ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

100-ஆவது டெஸ்ட்டில் அஸ்வின், போ்ஸ்டோ

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போ்ஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்குகிறது. அதில் களம் காணும் இந்தியாவின் அஸ்வின், இங்கிலாந்தின் போ்ஸ்டோ ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. 100-ஆவது டெஸ்ட்டில் களம் காணும் 14-ஆவது இந்திய வீரா் அஸ்வின் என்பதும், 17-ஆவது இங்கிலாந்து வீரா் ஜானி போ்ஸ்டோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு, ஒரே ஆட்டம் இரண்டு அல்லது 3 வீரா்களின் 100-ஆவது டெஸ்ட்டாக அமைவது இது 4-ஆவது முறையாகும். 2000 இங்கிலாந்தின் மைக்கேல் ஏதா்டன் மற்றும் அலெக் ஸ்டிவாா்ட் ஆகியோா் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஓல்டு டிராஃபோா்டில் விளையாடிய டெஸ்ட்டின் மூலம் தங்களின் 100-ஆவது டெஸ்ட் மைல் கல்லை எட்டினா். 2006 செஞ்சுரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து டெஸ்ட்டில் விளையாடிய தென்னாப்பிரிக்காவின் ஜேக்ஸ் காலிஸ், ஷான் பொலாக், நியூஸிலாந்தின் ஸ்டீஃபென் ஃபிளெம்மிங் ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட்டாகும்.

2013 ஆஷஸ் தொடரில் பொ்த்தில் நடைபெற்ற ஆட்டம், இங்கிலாந்தின் அலாஸ்டா் குக், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளாா்க் ஆகியோருக்கு 100-ஆவது டெஸ்ட்டாக அமைந்தது. அடுத்து... நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கும் நிலையில், அதில் களம் காணும் நியூஸிலாந்தின் டிம் சௌதி, கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு அது 100-ஆவது டெஸ்ட்டாக அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

எண்களை பெரிதாக கருதுவதில்லை

உண்மையில் இதுபோன்ற எண்கள் அடிப்படையிலான சாதனைகளை நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்த 100-ஆவது டெஸ்ட்டை எனது தந்தை 1000-ஆவது டெஸ்ட் போல கொண்டாடலாம். இந்த சாதனை எனது மனைவிக்கும், தாயாருக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இதற்காக எனது மகள்கள் என்னைவிட உற்சாகமாக இருக்கின்றனர். ஏனெனில் எனக்காக இவர்கள் அனைவரும் மேற்கொண்ட தியாகங்கள் அதிகம். ஆனால் என்னைப் பொருத்தவரை இதுபோன்ற மைல் கற்கள் வெறும் எண்களே.

- ரவிச்சந்திரன் அஸ்வின்

தாயாருக்கு சமர்ப்பணம்

எனது தந்தை மரணத்துக்குப் பிறகு, 10-க்கும் குறைவான வயதுடன் இருந்த நான் உள்பட 2 குழந்தைகளை எனது தாயார் ஜானெட் மிகக் கடினமாக உழைத்து வளர்த்தார். 3 வேலைகள் பார்த்து வந்த அவர், இரு முறை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். அவரிடம் அப்படி ஒரு உறுதித்தன்மை இருக்கிறது. தந்தை மரணத்துக்குப் பிறகு எங்களை ஒரு குடும்பமாக அப்படியே அவர் கட்டமைத்து வந்தார். எனக்கான உந்து சக்தியாக இருக்கும் அவருக்கு இந்த 100-ஆவது டெஸ்ட்டை சமர்ப்பிக்கிறேன்.

- ஜானி பேர்ஸ்டோ

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com