ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த்: 14 மாதங்களுக்குப் பிறகு களம் காண்கிறார்

ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த்: 14 மாதங்களுக்குப் பிறகு களம் காண்கிறார்

புது தில்லி, மார்ச் 12: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் - பேட்டராக செயல்படுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எத்தகைய வீரராக களம் காண்பார் என்பதில் உறுதித்தன்மை இல்லாமல் இருந்தது. "இம்பாக்ட் பிளேயர்'-ஆக ஆட்டத்தின் இடையே அவர் களமிறக்கப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது முழுமையான வீரராக, மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவே அவர் செயல்பட இருக்கிறார்.

ரிஷப் பந்த் கடந்த 2022 டிசம்பர் 30-ஆம் தேதி உத்தரகண்டின் ரூர்கீ பகுதியில் காரில் செல்லும்போது பயங்கர விபத்தை சந்தித்து படுகாயமடைந்தார். முழங்காலில் தீவிர காயம், மணிக்கட்டு மற்றும் கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. தேவையான அறுவைச் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தனது முழு உடற்தகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்தார் அவர்.

இந்நிலையில் பந்த், ஆட்டத்துக்கு உகந்த வகையில் முழுமையான உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாதெமி கடந்த வாரம் சான்று அளித்துள்ளது. அங்கு, உண்மையான ஆட்டத்தின் சூழலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், எந்தவித அசெளகர்யமும் இன்றி அவர் நீண்ட நேரம் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்ததாக அறியப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அகாதெமி சான்று வழங்கியிருக்கிறது.

உலகக் கோப்பை போட்டி வாய்ப்பு? தற்போது ஐபிஎல் போட்டியில் களம் காண இருக்கும் ரிஷப் பந்த், அதில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தரும் முக்கிய வீரராக கடந்த 6 ஆண்டுகளாக இருந்த பந்த், உலகக் கோப்பை போட்டியில் இளம் இந்திய அணிக்கு பலம் சேர்ப்பவராக இருப்பார். உலகக் கோப்பை அணியில் பந்த் இருந்தால் அது இந்தியாவுக்கு பலம் எனத் தெரிவித்த பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, அவர் ஐபிஎல் தொடரில் எவ்வாறு களமாடுகிறார் என முதலில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

ஷமி, பிரசித் இல்லை

குஜராத் டைட்டன்ஸ் வீரர் முகமது ஷமி, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் கடந்த மாதம் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையில், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர்கள் விளையாடவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதனிடையே, ஹெர்னியா அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட மும்பை இண்டியன்ஸ் பேட்டர் சூர்யகுமார் யாதவ், அணியின் முதலிரு ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com