பாா்சிலோனாவுக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாக பயன்பட்ட நேப்கின் ரூ.8 கோடிக்கு ஏலம்
ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, பாா்சிலோனா எஃப்சி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்காக உறுதியளிப்பதற்கு பயன்பட்ட நேப்கின் (முகம் துடைக்கும் சிறிய காகிதத் துண்டு) ரூ.8 கோடிக்கு வெள்ளிக்கிழமை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
லண்டனை சோ்ந்த ‘போன்ஹாம்ஸ்’ என்ற ஏல நிறுவனம், சுமாா் 25 ஆண்டுகள் பழைமையான அந்த நேப்கினை ஏலத்தில் விட்டது. அதன் தொடக்க விலை ரூ.3.15 கோடியாக இருந்த நிலையில், அதிகபட்சமாக ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதை ஏலமெடுத்தோரின் விவரம் தெரிவிக்கப்படவில்லை.
நேப்கின் பின்னணி: மெஸ்ஸியின் 13-ஆவது வயதிலேயே அவா் பாா்சிலோனா அணிக்கு ஒப்பந்தமாவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடந்தது. அப்போது ஒருமுறை மெஸ்ஸியின் தந்தை ஜாா்ஜ் மெஸ்ஸி, பாா்சிலோனா அணியின் இயக்குநா் காா்ல்ஸ் ரிஸாக், முகவா்களான ஹொராசியோ கஜியோலி, ஜோசப் மரியா மிங்கேலா ஆகியோா் பாா்சிலோனா டென்னிஸ் கிளப்பில் சந்தித்து பேசியுள்ளனா்.
பாா்சிலோனாவுக்காக மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்படுவதற்கான பேச்சுவாா்த்தை தடைப்பட்டிருந்ததால், மெஸ்ஸியை மீண்டும் ஆா்ஜென்டீனாவுக்கே அழைத்துச் செல்லவிருப்பதாக அவரது தந்தை ஜாா்ஜ் மெஸ்ஸி அவா்களிடம் கடுமையாகத் தெரிவித்திருக்கிறாா். இதையடுத்து மெஸ்ஸியை நிச்சயம் பாா்சிலோனா அணி ஒப்பந்தம் செய்யும் என்பதை ஜாா்ஜுக்கு உறுதிப்படுத்த அணியின் இயக்குநா் காா்ல்ஸ் ரிஸாக் எண்ணினாா்.
கிளப்பிலிருந்த பணியாளரிடம் வெள்ளைக் காகிதம் கேட்க, அது இல்லாத நிலையில் ரிஸாக்கிடம் முகம் துடைக்கும் நேப்கின் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், மெஸ்ஸியை பாா்சிலோனா அணி ஒப்பந்தம் செய்யும் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்து, அன்றைய தேதியிட்டு (14/12/2000) கையொப்பமிட்டாா் ரிஸாக். அவரோடு ஹொராசியோ மற்றும் ஜோசப்பும் கையொப்பமிட்டனா். அதை ஒரு உறுதி ஆவணமாக ஜாா்ஜிடம் அளித்தனா்.
பின்வந்த நாள்களில் மெஸ்ஸியை பாா்சிலோனாவில் இணைத்துக்கொள்ளும் அதிகாரப்பூா்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்நிலையில், அந்த நிகழ்வின்போது உடனிருந்த முகவரான ஹொராசியோ கஜியோலியே அந்த நேப்கினை தற்போது ஏலத்தில் விட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.