இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ராஜஸ்தான் - பெங்களூரு எலிமினேட்டர்: யார் முன்னிலை?
இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் வெளியேற்றும் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில், ராஜஸ்தான் 8 வெற்றிகளில் பெற்ற 17 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தையும், பெங்களூரு 7 வெற்றிகளில் கண்ட 14 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தையும் பிடித்தன. அந்தச் சுற்றின் கடைசி கட்டத்தில் இரு அணிகளுமே தலைகீழ் மாற்றத்தை கண்டன.

ஐபிஎல் போட்டியின் அறிமுக சாம்பியனான ராஜஸ்தான், இந்த சீசனை சிறப்பாக தொடங்கியது. பேட்டிங், பெüலிங் இரண்டிலுமே பலம் காட்டிய அந்த அணி, பெரும்பாலும் முதல் 4 இடங்களுக்குள்ளாகவே சுற்றிக்கொண்டிருந்தது.

முதல் 9 ஆட்டங்களில் ஒரு தோல்வி மட்டுமே கண்டிருந்த ராஜஸ்தான், கடைசிக்கு முந்தைய 4 ஆட்டங்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து அதிர்ச்சி கண்டது. கடைசி ஆட்டம் மழையால் கைவிடப்பட, 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

பேட்டர் ஜோஸ் பட்லர், உலகக் கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து திரும்பியது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னிங்ஸை தொடங்கும் ஜெய்ஸ்வால் - டாம் கோலர் கூட்டணி, அதிரடியை இழந்து தடுமாறுகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோருக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டியில் இதுவரை ராஜஸ்தானின் லோயர் ஆர்டர் பேட்டிங்கிற்கு அவ்வளவாக வேலை இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அந்த இடத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல், ஆவேஷ் கான் என, பெüலிங் லைன் அப்-இல் பலம் காட்டும் ராஜஸ்தானுக்கு, அகமதாபாத் ஆடுகளம் சாதகமாக இருக்கலாம்.

மறுபுறம் பெங்களுரூ அணிக்கு சீசன் தொடக்கம் மோசமாக இருந்தது. முதல் 8 ஆட்டங்களில் 7 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி, பட்டியலில் கடைசி 3 இடங்களிலேயே சுற்றிவந்து போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலையில் இருந்தது.

திடீரென வெகுண்ட பெங்களூரு, கடைசி 6 ஆட்டங்களிலுமே அட்டகாசமான வெற்றியை அடுத்தடுத்து பதிவு செய்தது. கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை வீழ்த்தி, தனக்கான பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்துகொண்டது.

அணியின் பேட்டிங்கில், நட்சத்திர வீரரான விராட் கோலி நம்பகமானவராகத் திகழ்கிறார். 14 ஆட்டங்களில் 708 ரன்கள் அடித்து இந்த சீசனின் ஆரஞ்சு கேப் கெüரவத்தை தன் வசம் வைத்துள்ளார். கேப்டன் டூ பிளெஸ்ஸிஸýம் கடைசி சில ஆட்டங்களில் தனது ஆட்டத் திறமையை மீட்டெடுத்திருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது.

அவர்களுக்கு அடுத்தபடியாக ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன் ரன்கள் சேர்க்கின்றனர். லோயர் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் வழக்கம் போல் விளாசுகிறார்.

பெüலிங்கில், சென்னைக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய யஷ் தயாளுடன் முகமது சிராஜ், லாக்கி ஃபெர்குசன், உள்ளிட்டோர் பலம் காட்டலாம். கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் சோபிக்காத நிலையில் பெüலிங்கில் பங்களிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com