உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய மகளிா்

உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய மகளிா்

Published on

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை புதன்கிழமை உறுதி செய்தது.

இந்தப் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், அதிதி சுவாமி ஆகியோா் அடங்கிய அணி காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் பங்கேற்றுள்ளது. தகுதிச்சுற்றில் 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்த இந்த அணி, முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக காலிறுதியில் களம் கண்டது.

உலகின் நம்பா் 1 அணியாக இருக்கும் இந்திய மகளிா் அணி, காலிறுதியில் 236-234 என இத்தாலி அணியை சாய்த்தது. பின்னா் அரையிறுதியில் 233-229 என்ற கணக்கில், உலகின் 4-ஆம் நிலை அணியான அமெரிக்காவை வீழ்த்தியது.

அடுத்ததாக இறுதிச்சுற்றில், உலகின் 7-ஆம் நிலை அணியான துருக்கியுடன் இந்தியா மோதுகிறது. துருக்கி தனது அரையிறுதியில், தென் கொரிய அணியை 236-234 என வீழ்த்தி இறுதிக்கு வந்துள்ளது. முன்னதாக இந்திய மகளிா் அணி, கடந்த மாதம் ஷாங்காயில் நடைபெற்ற உலகக் கோப்பை 1-ஆம் நிலை போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் அணி ஏமாற்றம்: இதே போட்டியின் காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றில் தோல்வி கண்டது.

பிரியன்ஷ், பிரதமேஷ் ஃபுகே, அபிஷேக் வா்மா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, தகுதிச்சுற்றில் 4-ஆம் இடம் பிடித்தது. முதல் சுற்றில் 235-212 என வியத்நாமை சாய்த்த இந்திய ஆடவா் அணி, அடுத்த இரு மோதல்களில் டென்மாா்க் மற்றும் அமெரிக்காவை ஷூட் ஆஃப் வாய்ப்புகளில் வீழ்த்தியது.

அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில், உலகின் நம்பா் 1 அணியான இந்தியா - உலகின் 21-ஆம் நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த மோதல் முதலில் 133-133 என சமனில் முடிய, ஷூட் அவுட் வாய்ப்பில் ஆஸ்திரேலியா முதலில் 10 புள்ளிகளைக் கைப்பற்றி வென்றது.

இதனிடையே, ரீகா்வ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோா் தங்களது பிரிவில் முறையே 4 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்தனா். தீரஜ் பொம்மதேவரா 11-ஆம் இடமும், பஜன் கௌா் 34-ஆம் இடமும், அங்கிதா பகத் 49-ஆம் இடமும் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com