
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் போலியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகின்றது. ரிக்கி பாண்டிங்கை பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியான நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், கெளதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கூகுள் விண்ணப்பங்கள் மூலம் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மே 13-ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது.
நேற்றுடன்(மே 27) விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3,000-க்கும் அதிகமானோர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில், பிரதமர் மோடி, அமித் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களில் போலியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 சர்வதேச ஒருநாள் போட்டிகள் அல்லது தேசிய அணிக்காக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டும்.
முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இ-மெயில் மூலம் பிசிசிஐ விண்ணப்பம் கோரிய நிலையில், 5,000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.