
சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முதல்முறையாக 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.
இந்த தொடரில் பல்வேறு உலகக் கோப்பை சாதனைகள் முறியடிக்க வாய்ப்புள்ளது.
அதிக ஃபோர்கள்
டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ஃபோர்கள் அடித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனா(111) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் விராட் கோலி(103) உள்ளார்.
இந்த முறை உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி இடம்பெற்றுள்ள நிலையில், இன்னும் 9 ஃபோர்கள் அடித்து எளிதாக முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள ரோஹித் சர்மா(91), டேவிட் வார்னரும்(86) விளையாடவுள்ள நிலையில், அவர்களும் பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது.
அதிவேக சதம்
டி20 உலகக் கோப்பையில் மேற்கத்திய தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 47 மற்றும் 50 பந்துகளில் சதமடித்து முதல் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகளில் பல அதிரடி பேட்டிங்களை கண்டுள்ளோம். ஆகையால், இந்த சாதனையும் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
டி20 போட்டிகளை பொறுத்தவரை நேபாள அணி வீரர் ஜான் நிகோல், 33 பந்துகளில் சதம் விளாசிய சாதனை உள்ளது.
அதிக கேட்ச்கள்
டி20 உலகக் கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ், 23 கேட்ச்கள் பிடித்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்(21) இரண்டாவது இடத்திலும், நான்காம் இடத்தில் ரோஹித் சர்மா, மேக்ஸ்வெல் ஆகியோர் 16 கேட்ச்களுடன் உள்ளனர்.
இந்த தொடரில், வார்னர், ரோஹித், மேக்ஸ்வெல் ஆகிய மூவரும் விளையாடவுள்ள நிலையில், முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
அனைத்து ஐசிசி கோப்பைகள் வெல்லும் வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, ஏற்கெனவே கடந்தாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்றுள்ளது.
தற்போது டி20 உலகக் கோப்பையும் வென்றால், ஒரே நேரத்தில் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற அணி என்ற சாதனை படைக்கும்.
மேலும் ஐசிசி யு-19 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை, ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து தொடர்களின் நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலியா உள்ளது.
ஒரு தொடரில் அதிக ரன்கள்
டி20 உலகக் கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை விராட் கோலியிடம் உள்ளது. 2014ஆம் ஆண்டு 6 போட்டிகளில் 319 ரன்கள் குவித்தார்.
தற்போதைய உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் விளையாடுவதால், ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இதனால், இந்த சாதனையும் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.