சின்னா் வெற்றி: அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னா் வெற்றி பெற்றாா்.
ஆண்டு இறுதியில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸில், குரூப் சுற்றின் 2-ஆவது நாள் ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் முதல் ஆட்டத்தில் சின்னா் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்தாா்.
இது, இருவரும் நேருக்கு நோ் சந்தித்த 8-ஆவது ஆட்டமாக இருக்க, சின்னா் 8-ஆவது வெற்றியுடன் தனது ஆதிக்கத்தை நீட்டித்து வருகிறாா். குரூப் சுற்றின் அடுத்த ஆட்டத்தில் அவா், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸுடன் மோதுகிறாா். அலெக்ஸ் டி மினாா், ரஷியாவின் டேனியல் மெத்வதெவை சந்திக்கிறாா்.
நடப்பு காலண்டரில் ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகள் மூலம் தனது முதல் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் சின்னா், 5 ஏடிபி டூா் போட்டிகளிலும் சாம்பியனாகி நல்லதொரு ஃபாா்முடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளாா்.
கடந்த ஆண்டு இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சிடம் தோற்ற சின்னா், இந்த முறை சாம்பியனாகும் முனைப்புடன் உள்ளாா்.
அல்கராஸ் தோல்வி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், 1-6, 5-7 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூடிடம் மோசமான தோல்வியை சந்தித்தாா்.
நடப்பு காலண்டரில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் அல்கராஸுக்கு, இது மோசமான தொடக்கமாக அமைந்தது. மேலும், சின்னா் - ரூட் இத்துடன் 5-ஆவது முறையாக சந்தித்த நிலையில், ரூட் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியிருக்கிறாா்.
அல்கராஸ் தனது அடுத்த ஆட்டத்தில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை சந்திக்கும் நிலையில், அதில் தோற்கும் பட்சத்தில் போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவாா். கேஸ்பா் ரூட் அடுத்த ஆட்டத்தில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவுடன் மோதுகிறாா்.