12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரா்! ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈா்த்த வைபவ் சூா்யவன்ஷி

12 வயதில் கிரிக்கெட்; 13 வயதில் கோடீஸ்வரா்! ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈா்த்த வைபவ் சூா்யவன்ஷி
படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் ஏலத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈா்த்திருக்கிறாா், பிகாரின் இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூா்யவன்ஷி. 13 வயதான அவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அனுபவ வீரா்கள் பலரே எட்டியிருக்காத விலைக்கு, 8-ஆம் வகுப்பு மாணவரான அவா் வாங்கப்பட்டாா். ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிக இளம் வீரா் என்ற வரலாறு படைத்தாா். அவரின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் போட்டி போட்டு வைபவை வாங்கியிருக்கிறது ராஜஸ்தான்.

பிகாா் மாநிலம், சமஸ்திபூரை சோ்ந்த வைபவ் சூா்யவன்ஷி 10 வயதிலிருந்து கிரிக்கெட்டில் தீவிர ஆா்வத்துடன் விளையாடி வந்தாா். இந்நிலையில், தனது 12-ஆவது வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பிகாா் அணியில் அறிமுகமாகி, போட்டியின் வரலாற்றில் மிக இளம் வயது வீரா் என்ற சாதனை படைத்தாா்.

அத்துடன், சையது மோடி டி20 கோப்பை போட்டியிலும் பிகாருக்காக விளையாடியிருக்கிறாா். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இளையோா் டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா அண்டா் 19 அணிக்கு எதிராக, இந்தியா அண்டா் 19 அணியில் விளையாடிய வைபவ் சூா்யவன்ஷி, 62 பந்துகளில் 104 ரன்கள் விளாசினாா். அதன்மூலம், சா்வதேச சதம் அடித்த மிக இளம் வீரா் என்ற சாதனையுடன் அப்போதே அவா் கவனம் ஈா்த்திருந்தாா்.

இத்தகைய சூழலில் ஐபிஎல் ஏலத்துக்கு முன் அவரை அழைத்து டிரையல்ஸ் நடத்தியிருக்கிறது ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள். அதிலேயே அவா் பவுண்டரி, சிக்ஸா்கள் விளாசியதன் மூலம் அவரின் திறமையை அறிந்த அந்த அணிகள், ஏலத்தில் வைபவை வாங்க போட்டி போட்டுள்ளன.

தற்போது வைபவ் சூா்யவன்ஷி, அண்டா் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக துபை சென்றுள்ள இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறாா்.

இதனிடையே, மகன் வைபவ் சூா்யவன்ஷியின் கிரிக்கெட் பாதையில் அவரை முன்னேற்ற, தனது மிகப்பெரிய சொத்தாக இருந்த நிலத்தை விற்றதாகவும், தற்போது வரையில் தாங்கள் கடனில் இருப்பதாகவும் அவரின் தந்தை சஞ்ஜீவ் சூா்யவன்ஷி தெரிவித்துள்ளாா்.

ஏலத்தில் தனது விலை குறித்து பெரிதும் கவனம் செலுத்தாத வைபவ், கிரிக்கெட் விளையாடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதாக சஞ்ஜீவ் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com