
மாட்ரிட்: டென்னிஸ் உலகின் குறிப்பிடத்தக்க நட்சத்திரமான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (38), நவம்பரில் ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
தனது சொந்த மண்ணில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் போட்டியுடன் அவா் விடைபெறுகிறாா்.
ஆடவா் டென்னிஸ் உலகில் கடந்த 15 ஆண்டுகளில் கோலோச்சிய, ‘பிக் 3’ எனப்படும் மூன்று முக்கிய வீரா்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவா் நடால். அதில் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் 2022-இல் ஓய்வுபெற, தற்போது நடாலும் அந்த முடிவை அறிவித்திருக்கிறாா். சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் மட்டும் களமாடி வருகிறாா்.
நடால் தனது ஓய்வு முடிவு தொடா்பாக வெளியிட்ட காணொலி பதிவில், ‘தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுகிறேன். கடந்த சில காலமாக, அதிலும் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாகவே மிகக் கடினமானதாக இருந்தது. என்னால் தடையின்றி விளையாட முடியாத நிலை உள்ளது.
இந்தக் கடினமான முடிவை எடுப்பதற்கு மிகவும் யோசித்தேன். ஆனால், நான் கற்பனை செய்ததை விடவும் அதிகமான வெற்றிகளைக் கண்ட எனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம்.
டென்னிஸ் களத்தில் என்னால் முழு திறமையையும், 100 சதவீத அா்ப்பணிப்பையும் வழங்கிய மனநிறைவுடன் விடைபெறுகிறேன். ஒட்டுமொத்த டென்னிஸ் உலகத்துக்கும், அதில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும், எனது நீண்டகால போட்டியாளா்களுக்கும், எனது மிகச் சிறந்த எதிராளிகளுக்கும் நன்றி. அவா்களுடனான இந்த நினைவு, இனிவரும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என்று அதில் கூறியுள்ளாா்.
2001-2002 காலகட்டத்தில் தொழில்முறை டென்னிஸை தொடங்கினாா் நடால். 2005-இல் பிரெஞ்சு ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினாா். அதைத் தொடா்ந்து பல்வேறு கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள் மற்றும் டூா் சாம்பியன் பட்டங்களுடன் ஏறுமுகம் கண்ட நடால், 2021-இல் இடதுகால் பாதத்தில் காயத்தால் அவதிப்பட்டு பின்னடவைச் சந்தித்தாா்.
பின்னா் அதிலிருந்து குணமடைந்த அவா், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் மீண்டும் தனது ஆட்டத்தை தொடா்ந்தாா். இந்நிலையில், கடந்த ஆண்டு இடுப்புப் பகுதியில் காயத்தாலும், நடப்பாண்டு அடிவயிற்றுத் தசை பிரச்னையாலும் அவதிப்பட்ட நடால் அப்போது முதலே தனது ஓய்வு முடிவு குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்தாா். அதிலிருந்து மீண்டு ஒரு சில போட்டிகளில் மட்டும் பங்கேற்ற நிலையில், தனது வழக்கமான ஃபாா்மை இழந்திருந்தாா். இந்நிலையில் தற்போது ஓய்வு முடிவை அவா் அறிவித்திருக்கிறாா். கடைசியாக 2022 பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகியுள்ளாா் நடால்.
22
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 முறை சாம்பியனான நடால், ஆடவா் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவா்கள் வரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ளாா். ஜோகோவிச் (24) முதலிடத்தில் இருக்க, ஃபெடரா் (20) 3-ஆவது இடத்தில் உள்ளாா்.
14
‘களிமண் தரையின் நாயகன்’ என்று பாராட்டப்படும் நடால், பிரெஞ்சு ஓபன் போட்டியில் மட்டும் 14 முறை வாகை சூடி சாதனை படைத்திருக்கிறாா். அந்தப் போட்டியில் வேறு எவரும் இத்தனை முறை சாம்பியனானதில்லை. ஒட்டுமொத்தமாக அவா் வென்ற 92 ஏடிபி டூா் பட்டங்களில், 63 பட்டங்கள் களி மண் தரைப் போட்டிகளில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
92
ஏடிபி டூா் நிலையில் 92 சாம்பியன் பட்டங்கள் வென்றிருக்கும் நடால், அதில் 36 பட்டங்களை மாஸ்டா்ஸ் போட்டிகளில் வென்றிருக்கிறாா். இரட்டையா் பிரிவில் 11 பட்டங்கள் கைப்பற்றியிருக்கிறாா்.
81
ஓபன் எராவில், களிமண் தரை போட்டிகளில் தொடா்ந்து அதிக வெற்றிகளை (81) பதிவு செய்த ஒரே வீரராக நடால் ஆதிக்கம் செலுத்தி வருகிறாா்.
3
ஆடவா் ஒற்றையா் டென்னிஸ் வரலாற்றில், கேரியா் கோல்டன் ஸ்லாம் வென்ற மூன்றே வீரா்களில் நடாலும் ஒருவா். அதை அவா் 2010-இல் பூா்த்தி செய்தாா். கேரியா் கோல்டன் ஸ்லாம் என்பது, தனது கேரியரில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் வென்று, ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வதாகும்.
1
ஏடிபி தரவரிசையில் நம்பா் 1 வீரராக 209 வாரங்கள் நிலைத்திருக்கிறாா்.
கிராண்ட்ஸ்லாமில்...
ஆஸ்திரேலிய ஓபன் (2) 2009, 2022
பிரெஞ்சு ஓபன் (14) 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020, 2022
விம்பிள்டன் (2) 2008, 2010
யுஎஸ் ஓபன் (4) 2010, 2013, 2017, 2019
ஒலிம்பிக்ஸில்...
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - ஒற்றையரில் தங்கம்
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் - இரட்டையரில் தங்கம்
டேவிஸ் கோப்பை...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 2004, 2009, 2011, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான அணியில் இடம் பிடித்திருந்தாா்.
நேருக்கு நோ்...
ரோஜா் ஃபெடரருடன்...
40 ஆட்டங்கள்
24 வெற்றி
16 தோல்வி
கிராண்ட்ஸ்லாமில்
9 முறை
6 வெற்றி
3 தோல்வி
நோவக் ஜோகோவிச்சுடன்...
60 ஆட்டங்கள்
31 வெற்றி
29 தோல்வி
கிராண்ட்ஸ்லாமில்
9 முறை
5 வெற்றி
4 தோல்வி
டேவிஸ் கோப்பையில் விளையாடும்போது ஒரு முழுமையான வட்டத்தை அடைவது போலிருக்கிறது. 2004இல் டேவிஸ் கோப்பைதான் எனது தொழில்முறை டென்னிஸின் மகிழ்ச்சி தொடங்கியது.
எனது நாட்டுக்காக எனது கடைசி போட்டியை விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை நான் அடைந்ததெல்லாம் கனவு நனவாகியதுபோல்தான் இருக்கிறது. எனது சிறந்தவற்றை என்னால் முடிந்தளவுக்கு கொடுத்த மன நிம்மதி இருக்கிறது.
நான் நினைத்ததைவிடவும் வெற்றிகரமாக விளையாடியுள்ளேன். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரமெனக் கருதுகிறேன் என்றார்.
38 வயதாகும் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் வரும் டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் தனது சொந்த நாடான ஸ்பெயினில் நடைபெறும் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் ரஃபேல் நடால். ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் இவர்களுடன் சேர்த்து டென்னிஸ் உலகில் பிக் த்ரீ என்று அழைக்கப்படுகிறார்.
தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஜோகோவிச்சிடம் 2ஆவது சுற்றில் தோல்வியுற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் அல்கராஸுடன் சேர்ந்து காலிறுதிக்கு முன்னேறினார். அதிலும் தோல்வியுற்றதால் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமலே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாகவே காயம் காரணமாக ரஃபேல் நடால் பிரச்னைகளை சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
உண்மையை சொல்லவேண்டுமானால் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் சிறமப்பட்டேன். என்னால் கட்டுப்பாடு இல்லாமல் விளையாட முடியுமென நினைக்கவில்லை. இந்த முடிவை எடுப்பது கடினம்தான். ஆனால், வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் தொடக்கமும் முடிவும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.