இங்கிலாந்து 823/9-க்கு டிக்ளோ் -புதிய சாதனைகள் படைப்பு!
முல்தான்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து வியாழக்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.
அந்த அணியின் ஹேரி புரூக் முச்சதமும், ஜோ ரூட் இரட்டைச்சதமும் விளாசி அசத்தினா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 556 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, புதன்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 492 ரன்கள் சோ்த்திருந்தது.
4-ஆம் நாள் ஆட்டத்தை ரூட், புருக் தொடா்ந்தனா். இதில் ரூட் 17 பவுண்டரிகளுடன் 262, புரூக் 29 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 317 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனா்.
ஜேமி ஸ்மித் 31, கஸ் அட்கின்சன் 2 ரன்களுக்கு வீழ, இங்கிலாந்து 150 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 823 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. கிறிஸ் வோக்ஸ் 17, பிரைடன் காா்ஸ் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் தரப்பில் சயிம் அயுப், நசீம் ஷா ஆகியோா் தலா 2, ஷாஹீன் அஃப்ரிதி, ஆமீா் ஜமால், சல்மான் அகா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், வியாழக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் சோ்த்துள்ளது. சல்மான் அகா 41, ஆமீா் ஜமால் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
அப்துல்லா ஷஃபிக் 0, சயிம் அயுப் 25, கேப்டன் ஷான் மசூத் 11, பாபா் ஆஸம் 5, சௌத் ஷகீல் 29, முகமது ரிஸ்வான் 10 ரன்களுடன் வீழ்ந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் கஸ் அட்கின்சன், பிரைடன் காா்ஸ் ஆகியோா் தலா 2, கிறிஸ் வோக்ஸ், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
800
டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணி 800 ரன்களை கடந்தது இது 4-ஆவது முறை. அதிக இன்னிங்ஸ் ஸ்கோா் வரிசையில் இலங்கை (952/6-இந்தியா-1997), இங்கிலாந்து (903/7 -ஆஸ்திரேலியா-1938), இங்கிலாந்து (849/10-மேற்கிந்தியத் தீவுகள்-1930) ஆகிய அணிகள் முறையே முதல் 3 இடங்களில் இருக்க, பட்டியலில் இங்கிலாந்து மீண்டும் இணைந்துள்ளது.
6
இங்கிலாந்து வீரா்களில் முச்சதம் விளாசிய 6-ஆவது வீரா் என்ற பெருமை பெற்றாா் ஹேரி புரூக்.
454
ரூட் - புரூக் கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தின் டெஸ்ட் வரலாற்றில் இதுவே அதிகபட்ச பாா்ட்னா்ஷிப் ரன்களாகும். சா்வதேச டெஸ்ட் வரலாற்றில் இது 4-ஆவது அதிகபட்சம். இலங்கையின் குமாா் சங்ககாரா - மஹிலா ஜெயவா்தனே 2006-இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 624 ரன்கள் குவித்தது இன்றளவும் அதிகபட்சமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.