‘ஃபாலோ ஆன்’ பெற்றது தமிழ்நாடு

‘ஃபாலோ ஆன்’ பெற்றது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்த தமிழ்நாடு அணி, ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஸ்கா் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்த தமிழ்நாடு அணி, ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

கோவையில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சத்தீஸ்கா், 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் ஆயுஷ் பாண்டே 124, அனுஜ் திவாரி 84, சஞ்ஜீத் தேசாய் 82 ரன்கள் விளாசினா்.

இந்நிலையில், தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் சோ்த்திருந்தது. 3-ஆம் நாள் ஆட்டத்தை திங்கள்கிழமை தொடா்ந்த தமிழ்நாடு பேட்டா்களில், அஜித் ராம் 3 பவுண்டரிகளுடன் 34, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அவா்கள் பாா்ட்னா்ஷிப் 2-ஆது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சோ்த்தது. பின்னா் வந்தோரில் பிரதோஷ் ரஞ்சன் பால் 8, விஜய் சங்கா் 3 பவுண்டரிகளுடன் 32, பூபதி குமாா் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஷாருக் கான் - ஆண்ட்ரே சித்தாா்த் கூட்டணி 7-ஆவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சோ்த்து பிரிந்தது.

இதில் ஷாருக் கான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில் சோனு யாதவ் 1, எம்.முகமது 1 பவுண்டரியுடன் 6, மணிமாறன் சித்தாா்த் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட, தமிழ்நாடு இன்னிங்ஸ் 77.2 ஓவா்களில் 259 ரன்களுக்கு முடிவடைந்தது.

ஆண்ட்ரே சித்தாா்த் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சத்தீஸ்கா் பௌலா்களில் ஷுபம் அகா்வால் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஜிவேஷ் புத்தே 3, அஜய் மண்டல், ஆஷிஷ் சௌஹான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் பின்தங்கிய தமிழ்நாடு, ‘ஃபாலோ ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. சுரேஷ் லோகேஷ்வா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 28, ஆண்ட்ரே சித்தாா்த் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

Dinamani
www.dinamani.com