மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வில்வித்தை விளையாட்டில் அரையிறுதிச்சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிச்சுற்றில் ஈரானின் முகமது ரேஸா அராப் அமேரியை 7 - 3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங்.
இதன்மூலம், பாராலிம்பிக் வில்வித்தையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்வீந்தர் சிங் படைத்துள்ளார். இறுதிச்சுற்றுக்கு ஹர்வீந்தர் சிங் தகுதி பெற்றிருப்பதன் மூலம், வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
போலந்து வீரர் லூகாஸ் சிஸ்ஸெக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டாய்மன் கெண்டோன்-ஸ்மித் இடையேயான அரையிறுதிச்சுற்றுப் போட்டியில் போலந்து வீரர் எல் சிஸ்ஸெக் வெற்றி பெற்று இறுத்திச்சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, இறுதிச்சுற்றுப் போட்டியில் ஹர்வீந்தர் சிங்கை லூகாஸ் சிஸ்ஸெக் எதிர்கொண்டார்.
அதில் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங் 6 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம், பாராலிம்பிக் வில்வித்தையில் இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹர்வீந்தர் சிங் படைத்துள்ளார்.
பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 19-ஆவது இடத்தில் இருந்து 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பிரதமர் பாராட்டு: இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஹர்வீந்தர் சிங்கை பாராட்டி வாழ்த்தியுள்ளார். இது சிறப்புமிக்கதொரு தங்கப் பதக்கம் என அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் பாராட்டியுள்ளார்.