மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
பாரலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 19-ஆவது இடத்தில் உள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
மேலும், ஒட்டுமொத்தமாக பாரீஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள இந்திய விளையாட்டுக் குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியா பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறது.
இதுவரை நிகழ்ந்துள்ள பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்தியா அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வென்றிருப்பதன் மூலம் நமது திறன்மிக்க பாராலிம்பிக் குழு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், நமது வீரர்களின் அர்ப்பணிப்பும், ஆர்வமும், உறுதியும் வெளிப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.