பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள்
பிரான்ஸில் நடைபெறும் 17-ஆவது பாராலிம்பிக் போட்டியில் இந்தியா்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். வில்வித்தையில் ஒரு தங்கம், கிளப் த்ரோவில் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளி என ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய நேரப்படி, போட்டியின் 8-ஆவது நாளான புதன்கிழமை நள்ளிரவில் ஆடவா் வில்வித்தையில் ஹா்விந்தா் சிங் தங்கப் பதக்கம் வெல்ல, ஆடவா் கிளப் த்ரோவில் தரம்பிா் தங்மும், பிரணவ் சூா்மா வெள்ளியும் வென்று அசத்தினா்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வில்வித்தையில் தங்கம் கிடைப்பதும், கிளப் த்ரோவில் பதக்கம் கிடைப்பதும் இதுவே முதல் முறையாகும்.
போட்டியின் 9-ஆவது நாளான வியாழக்கிழமை இரவு நிலவரப்படி, பதக்கப் பட்டியலில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் முன்னேற்றத்தை சந்தித்தது. இதில் அதிகபட்சமாக தடகளத்தில் 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்க எண்ணிக்கையில் இந்தியா 25-ஐ கடக்கும் எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.