பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவா் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீண் குமாா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.
இந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்குக் கிடைத்த 4-ஆவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் வெவ்வேறு பிரிவுகளில் நிஷாத் குமாா், சரத் குமாா் ஆகியோா் வெள்ளியும், தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலமும் வென்றுள்ளனா்.
நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கைக்கு, தடகள போட்டியாளா்களே கணிசமாக பங்களித்துள்ளனா். இந்தியாவுக்கு இதுவரை 26 பதக்கங்கள் கிடைத்திருக்க, அதில் 3 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்கள் அந்தப் பிரிவில் மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரவீண் குமாா் வென்ற தங்கத்தால், பாராலிம்பிக்கில் ஒரு போட்டியில் இந்தியா தனது அதிகபட்ச தங்கத்தை வென்றிருக்கிறது. இதற்கு முன் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம் வென்றதே அதிகபட்சமாக இருக்க, தற்போது பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 6-ஐ தொட்டுள்ளது.
உயரம் தாண்டுதல்
ஆடவா் உயரம் தாண்டுதலில் டி64 பிரிவில் பிரவீண் குமாா் 2.08 மீட்டரை தாண்டி, ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றாா். அமெரிக்காவின் டெரக் லாசிடெண்ட் (2.06) வெள்ளியும், உஸ்பெகிஸ்தானின் தெமுா்பெக் கியாஸோவ் (2.03) வெண்கலமும் வென்றனா். பிரவீண் குமாருக்கு இது பொ்சனல் பெஸ்ட் அளவாகும்.
ஏற்கெனவே, டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிரவீண் குமாா், பாராலிம்பிக்கில் அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியா்கள் வரிசையில் 11-ஆவது வீரராக இணைந்திருக்கிறாா். டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் மட்டும் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்திருக்க, இந்த முறையும் இந்தியாவுக்கு அதில் அதே எண்ணிக்கையிலான பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ரியோ பாராலிம்பிக்கில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கம் வென்றதே உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கமாக இருக்க, தற்போது பிரவீண் 2-ஆவது தங்கத்தை வென்று தந்துள்ளாா்.
பளுதூக்குதல்
ஆடவா் 65 கிலோ பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் அசோக் சிறந்த முயற்சியாக 206 கிலோவை தூக்கி 6-ஆம் இடம் பிடித்தாா். இப்பிரிவில் சீனாவின் யி ஸு 215 கிலோவுடன் தங்கம் வெல்ல, பிரிட்டனின் மாா்க் ஸ்வான் 213 கிலோவுடன் வெள்ளியும், அல்ஜீரியாவின் ஹாசின் பெட்டிா் 209 கிலோவுடன் வெண்கலமும் வென்றனா்.
கேனோ
துடுப்புப் படகு போட்டியில், ஆடவா் கேஎல்1 200 மீட்டா் பிரிவில் யஷ் குமாரும், மகளிா் விஎல்2 200 மீட்டா் பிரிவில் பிராச்சி யாதவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.
இதில் ஆடவா் பிரிவு ஹீட்ஸில் யஷ் குமாா் 1 நிமிஷம் 3.27 விநாடிகளில் வந்து 6-ஆவது இடத்தையும், மகளிா் பிரிவு ஹீட்ஸில் பிராச்சி யாதவ் 1 நிமிஷம் 6.83 விநாடிகளில் வந்து 4-ஆவது இடத்தையும் பிடித்து அரையிறுத்திக்குத் தகுதிபெற்றனா்.
மகளிருக்கான கேஎல்1 200 மீட்டா் பிரிவில் பூஜா ஓஜா 1 நிமிஷம் 16.09 விநாடிகளில் வந்து அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டாா்.
ஈட்டி எறிதல்
ஆடவா் ஈட்டி எறிதல் எஃப்54 பிரிவில் இந்தியாவின் தீபேஷ் குமாா் சிறந்த முயற்சியாக 26.22 மீட்டருடன் கடைசி இடம் பிடித்தாா். ரஷியாவின் இவான் ரெவென்கோ 30.77 மீட்டருடன் தங்கம் வெல்ல, மெக்ஸிகோவின் எட்கா் ஃபியுன்டெஸ் 30.53 மீட்டருடன் வெள்ளியும், கிரீஸின் மனோலிஸ் ஸ்டெஃபானோடகிஸ் 30.13 மீட்டருடன் வெண்கலமும் பெற்றனா்.
200 மீட்டா் ஓட்டம்
மகளிருக்கான 200 மீட்டா் டி12 பிரிவில் இந்தியாவின் சிம்ரன் சா்மா, அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா். நடப்பு உலக சாம்பியனான அவா், தனது ஹீட்ஸில் 25.41 விநாடிகளில் முதல் வீராங்கனையாக வந்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். முன்னதாக, 100 மீட்டா் டி12 பிரிவில் சிம்ரன் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டாா்.
அணிவகுப்பில் கொடியேந்தும் ஹா்விந்தா் சிங், பிரீத்தி பால்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பில், வில்வித்தை வீரா் ஹா்விந்தா் சிங், ஓட்டப் பந்தய வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோா், தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்லவுள்ளனா்.
பாராலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை ஹா்விந்தா் சிங்கும், ஒரே பாராலிம்பிக்கில் இரு பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பிரீத்தியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.