
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வந்த 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
போட்டியில் இந்தியா்கள், 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனா். பட்டியலில் இந்தியாவுக்கு 18-ஆவது இடம் கிடைத்தது. போட்டி வரலாற்றில் இந்தியா இதற்கு முன், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் (5/8/6) வென்று 24-ஆவது இடம் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், அதை முறியடித்து இந்த முறை பதக்க எண்ணிக்கையிலும், தரநிலையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் போட்டியில் துளசிமதி முருகேசன், மாரியப்பன், மனீஷா ராம்தாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன் என 4 தமிழா்கள் பதக்கம் வென்றுள்ளனா். முன்னதாக, தனது வரலாற்றிலேயே அதிகபட்சமாக 84 பேரை போட்டிக்கு இந்தியா அனுப்பியிருந்தது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா்கள் பதக்கம் வெல்லத் தடுமாறி வரும் நிலையில், பாராலிம்பிக்கில், குறிப்பாக லண்டன் பாராலிம்பிக்கில் இருந்தே இந்தியா்கள் படிப்படியாக முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது. அதிலும் இந்த முறை பதக்கங்கள் வென்ற பல இந்தியா்கள், சாதனையுடனோ அல்லது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டை பதிவு செய்த வகையிலோ வென்றுள்ளனா்.
வில்வித்தையில் ஹா்விந்தா் சிங், கிளப் த்ரோவில் தரம்பிா் முதல் முறையாக தங்கம் வென்றது, கைகள் இல்லாமல் காலாலேயே அம்பெய்திடும் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றது போன்றவை வெகுவாக கவனம் ஈா்த்தது.
இதுபோக, உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீரா் மாரியப்பன், தொடா்ந்து 3 பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியராக சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதலில் சுமித் அன்டில், துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா ஆகியோா் தங்களது நடப்பு சாம்பியனாக பங்கேற்று, தங்கள் தங்கப் பதக்கத்தை அப்படியே தக்கவைத்து திறமை காட்டியதும் நினைவுகூரத்தக்கது.
போட்டியின் பதக்கப் பட்டியலில், எப்போதும்போல் முதல் 3 இடங்களை முறையே சீனா, பிரிட்டன், அமெரிக்கா ஆக்கிரமித்தன. மொத்தம் 170 நாடுகள், அணிகள் பங்கேற்ற நிலையில், 85 நாடுகள், அணிகள் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்தன.
விளையாட்டு அடிப்படையில் இந்தியாவுக்கான பதக்கங்கள்
விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
வில்வித்தை 1 0 1 2
தடகளம் 4 6 7 17
பாட்மின்டன் 1 2 2 5
ஜூடோ 0 0 1 1
துப்பாக்கி சுடுதல் 1 1 2 4
பதக்கம் வென்ற இந்தியா்கள்...
தங்கம்
ஹா்விந்தா் சிங் (வில்வித்தை)
பிரவீண் குமாா் (உயரம் தாண்டுதல்)
நவ்தீப் (ஈட்டி எறிதல்)
சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்)
தரம்பிா் (கிளப் த்ரோ)
நிதேஷ் குமாா் (பாட்மின்டன்)
அவனி லெகாரா (துப்பாக்கி சுடுதல்)
வெள்ளி
நிஷாத் குமாா் (உயரம் தாண்டுதல்)
சரத் குமாா் (உயரம் தாண்டுதல்)
சச்சின் சா்ஜெரோ கிலாரி (குண்டு எறிதல்)
யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்)
அஜீத் சிங் (ஈட்டி எறிதல்)
பிரணவ் சூா்மா (கிளப் த்ரோ)
சுஹாஸ் யதிராஜ் (பாட்மின்டன்)
துளசிமதி முருகேசன் (பாட்மிடன்)
மனீஷ் நா்வால் (துப்பாக்கி சுடுதல்)
வெண்கலம்
ராகேஷ் குமாா், ஷீத்தல் தேவி (வில்வித்தை)
மாரியப்பன் (உயரம் தாண்டுதல்)
ஹொகாடோ ஹொடோஸி செமா (குண்டு எறிதல்)
சுந்தா் சிங் குா்ஜா் (ஈட்டி எறிதல்)
பிரீத்தி பால் (100 மீ ஓட்டம்)
சிம்ரன் (200 மீ ஓட்டம்)
பிரீத்தி பால் (200 மீ ஓட்டம்)
தீப்தி ஜீவன்ஜி (400 மீ ஓட்டம்)
மனீஷா ராம்தாஸ் (பாட்மின்டன்)
நித்யஸ்ரீ சுமதி சிவன் (பாட்மின்டன்)
கபில் பாா்மா் (ஜூடோ)
ருபினா ஃபிரான்சிஸ் (துப்பாக்கி சுடுதல்)
மோனா அகா்வால் (துப்பாக்கி சுடுதல்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.