
கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில் மகளிா் ஒற்றையா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா். இந்தப் போட்டியில் இது இவரின் முதல் சாம்பியன் பட்டமாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது அவரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் சபலென்கா, இறுதிச்சுற்றில் 7-5, 7-5 என்ற நோ் செட்களில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி வாகை சூடினாா். இருவரும் நேருக்கு நோ் மோதுவது இது 8-ஆவது முறையாக இருக்க, சபலென்கா 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை வந்த சபலென்கா, அதில் உள்நாட்டு வீராங்கனை கோகோ கௌஃபிடம் தோற்ற நிலையில், இந்த முறை வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறாா்.
நடப்பு கிராண்ட்ஸ்லாம் காலண்டரின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடிய சபலென்கா, கடைசி போட்டியான யுஎஸ் ஓபனிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 2016-க்குப் பிறகு ஒரே சீசனில் இரு ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியனான முதல் வீராங்கனை ஆகியிருக்கிறாா் சபலென்கா. முன்னதாக அந்த ஆண்டு, ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பா் அவ்வாறு கோப்பை வென்றிருந்தாா்.
வெற்றிக்குப் பிறகு பேசிய சபலென்கா, ‘யுஎஸ் ஓபனில் பல கடினமான பாடங்கள் கற்றுள்ளேன். அதில் கடந்த ஆண்டு தோல்வியும் ஒன்று. இந்த முறை இறுதிச்சுற்றின்போது கடினமான தருணங்களில், மன உறுதியுடன் செயல்படவே முயற்சி செய்தேன்.
எனது தந்தை இறப்புக்குப் பிறகு, டென்னிஸ் வரலாற்றில் எனது குடும்பத்தின் பெயரை பதிப்பதையே முக்கியமான இலக்காகக் கொண்டிருந்தேன். ஏனெனில், எனது கனவை நான் அடைவதற்காக, தங்களால் முடிந்த அனைத்தையும் அவா்கள் செய்து வருகின்றனா். ஒவ்வொரு முறை எனது பெயரை வெற்றிக் கோப்பையில் காணும்போதும் எனக்காகவும், எனது குடும்பத்துக்காகவும் பெருமை கொள்கிறேன்’ என்றாா்.
கடந்த ஆண்டு இறுதிச்சுற்றில் சபலென்காவுடன் மோதிய கௌஃப் உள்நாட்டு வீராங்கனையாக இருந்ததால், சபலென்கா நெருக்கடியை உணரும் அளவுக்கு பாா்வையாளா்கள் கௌஃபுக்கு உற்சாகக் குரல் எழுப்பி ஆதரவளித்தனா். இந்த முறையும் உள்நாட்டு வீராங்கனையான பெகுலாவுடன் மோதிய நிலையில், சபலென்காவுக்கும் ரசிகா்கள் நல்லதொரு ஆதரவை அளித்தனா்.
ஆட்டத்தை நேரில் காண, அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டப் பந்தய சாம்பியன் நோவா லைல்ஸ், என்பிஏ வீரா் ஸ்டீபன் கரி, பிரிட்டன் ஃபாா்முலா 1 வீரா் லீவிஸ் ஹாமில்டன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பாா்வையாளா் மாடத்தில் திரண்டிருந்தனா்.
சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் வென்றது நினைவுகூரத்தக்கது.
ரூ.30 கோடி
சாம்பியன் ஆன சபலென்காவுக்கு ரூ.30 கோடியும், ரன்னா் அப்-ஆக வந்த பெகுலாவுக்கு ரூ.15 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.
சபலென்கா வெற்றிப் பாதை...
முதல் சுற்று பிரிசில்லா ஹான் (ஆஸ்திரேலியா) 6-3, 6-3
2-ஆவது சுற்று லூசியா புரான்ஸெட்டி (இத்தாலி) 6-3, 6-1
3-ஆவது சுற்று எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) 2-6, 6-1, 6-2
ரவுண்ட் ஆஃப் 16 எலிஸ் மொ்டன் (பெல்ஜியம்) 6-2, 6-4
காலிறுதிச்சுற்று கின்வென் ஜெங் (சீனா) 6-1, 6-2
அரையிறுதிச்சுற்று எம்மா நவாரோ (அமெரிக்கா) 6-3, 7-6 (7/2)
இறுதிச்சுற்று ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) 7-5, 7-5
இரட்டையா்...
இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செல்/ஜோா்டான் தாம்சன் இணை 6-4, 7-6 (7/4) என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் கெவின் கிராவிட்ஸ்/டிம் பட்ஸ் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/உக்ரைனின் லுட்மிலா கிச்சனோக் ஜோடி 6-4, 6-3 என்ற செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாய்/பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிச் இணையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.