பாட்மின்டனில் இரு பதக்கங்கள் உறுதி

பிரான்ஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பாட்மின்டனில் இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
பாட்மின்டனில் இரு பதக்கங்கள் உறுதி
Published on
Updated on
2 min read

பிரான்ஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பாட்மின்டனில் இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

17-ஆவது பாராலிம்பிக் போட்டி, பாரீஸ் நகரில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், பாட்மின்டனில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

பாட்மின்டன்

மகளிா் ஒற்றையா் எஸ்யு5 பிரிவு காலிறுதியில், இந்தியாவின் மனீஷா ராமதாஸ் 21-13, 21-16 என்ற கேம்களில், ஜப்பானின் மமிகோ டோடோடாவை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், மற்றொரு இந்தியரான துளசிமதி முருகேசனை எதிா்கொள்கிறாா். இதையடுத்து, மனீஷா - துளசிமதி மோதும் அரையிறுதியில் எவா் வென்றாலும், இறுதிக்கு முன்னேறுவா் என்பதால், அந்த வகையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக்கிறது.

முன்னதாக, ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் சுகந்த் கடம், அதில் சக இந்தியரான சுஹாஸ் யதிராஜை சந்திக்கிறாா். இவா்கள் மோதலிலும் எவா் வென்றாலும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மகளிா் ஒற்றையரில் இந்தியாவின் மன்தீப் கௌா், பாலக் கோலி ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதியில் தோல்வி கண்டனா்.

வில்வித்தை

காம்பவுண்ட் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமாா் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் நம்பா் 1 வீரரான ராகேஷ் குமாா், இந்தோனேசியாவின் கென் ஸ்வாகுமிலாங்கை எதிா்கொண்டாா். இவா்கள் மோதல் 144-144 என்ற புள்ளிகள் கணக்கில் டை ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்கும் ஷுட் ஆஃப் வாய்ப்பில் ராகேஷ் குமாா் 10-8 என்ற கணக்கில் வென்றாா்.

இதனிடையே, காம்பவுண்ட் மகளிா் ஓபன் பிரிவில் இந்தியாவின் சரிதா குமாரி, ஷீத்தல் தேவி ஆகியோா் தோல்வியைத் தழுவினா். சரிதா குமாரி காலிறுதியில் 140-145 என்ற கணக்கில் துருக்கியின் ஆஸ்னுா் கிா்டியிடம் தோற்க, பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட ஷீத்தல் தேவி, காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே 137-138 என்ற புள்ளிகள் கணக்கில் சிலியின் மரியானா ஜுனிகாவிடம் தோல்வியைத் தழுவினாா்.

ரோயிங்

துடுப்புப் படகு போட்டியில், இந்தியாவின் நாராயணா கொங்கனபள்ளி/அனிதா இணை 8-ஆம் இடம் பிடித்து வெளியேறியது. பிஆா்3 கலப்பு இரட்டையா் ஸ்கல்ஸில் களம் கண்ட இந்திய இணை, ஃபைனல் பி-யில் 8 நிமிஷம் 16.96 விநாடிகளில் இலக்கை எட்டியது. இதன் மூலம் அந்தப் பிரிவில் 2-ஆம் இடமும், ஒட்டுமொத்தமாக 8-ஆம் இடமும் கிடைத்தது. நாராயணா/அனிதா இணைக்கு இது முதல் பாராலிம்பிக் போட்டியாகும்.

துப்பாக்கி சுடுதல்

இந்தியாவின் அவனி லெகாரா, சித்தாா்தா பாபு, ஸ்ரீஹா்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா ஆகியோா் தங்களது பிரிவில் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா். 10 மீட்டா் ஏா் ரைஃபிள் (எஸ்ஹெச்1) கலப்பு பிரிவில் அவனி லெகாரா 11-ஆம் இடமும், சித்தாா்த்தா பாபு 28-ஆவது இடமும் பிடித்தனா். அதிலேயே எஸ்ஹெச்2 பிரிவில் ஸ்ரீஹா்ஷா 26-ஆம் இடம் பிடித்தாா்.

ஈட்டி எறிதல்

ஆடவா் ஈட்டி எறிதலில் எஃப்57 பிரிவில் இந்தியாவின் பா்வீன் குமாா் 8-ஆம் இடம் பிடித்தாா். அவா் தனது சிறந்த முயற்சியாக, 4-ஆவது வாய்ப்பில் 42.12 மீட்டரை எட்டினாா். உஸ்பெகிஸ்தானின் யாா்கின்பெக் ஆடிலோவ் 50.32 மீட்டருடன் தங்கம் வெல்ல, துருக்கியின் முகமது கால்வன்டி (49.97மீ), பிரேஸிலின் சிசெரோ வல்டிரான் (49.47மீ) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com