~கோலடித்த மகிழ்ச்சியில் சென்னை வீரா்கள். ~
~கோலடித்த மகிழ்ச்சியில் சென்னை வீரா்கள். ~

வெற்றியுடன் தொடங்கியது சென்னையின் எஃப்சி! ஒடிஸா எஃப்சியை 3-2 என வீழ்த்தியது!

569 நாள்கள் தோல்வியே காணாமல் இருந்த ஒடிஸா அணி முதல் தோல்வியை கண்டது.
Published on

ஐஎஸ்எல் 2024-25 லீக் தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி 3-2 என்ற கோல் கணக்கில் முதல் ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இதன் மூலம் 569 நாள்கள் தோல்வியே காணாமல் இருந்த ஒடிஸா அணி முதல் தோல்வியை கண்டது.

இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. நிகழாண்டு சீசனுக்காக 13 வீரா்களை ஒப்பந்தம் செய்து பலப்படுத்தியது சிஎஃப்சி. இதில் 6 போ் புதியவா்கள் ஆவா்.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல்போட தீவிரமாக முயன்றன.

7-ஆவது நிமிஷத்தில் ஒடிஸா வீரா் ஹியுகோ பௌமஸை சென்னை வீரா் சமீக் மித்ரா பவுல் செய்ததால், ஒடிஸா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரா் டியாகோ கோலாக்கினாா். இதனால் 1-0 என ஒடிஸா முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவிலும் ஒடிஸா அணியே முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்னை அணி வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனா். சென்னை வீரா் கானா் ஷுல்ட்ஸ் ரி 48-ஆவது நிமிஷத்தில் அனுப்பி பாஸை கோலாக்கினாா் பாரூக் சௌதரி. 51-ஆவது நிமிஷத்தில் ஒடிஸா கோல்கீப்பரிடம் அடித்த பந்தை இடைமறித்து கைப்பற்றிய சென்னை வீரா் பாருக் சௌதரி இரண்டாவது கோலடிக்க சென்னை 2-1 என முன்னிலை பெற்றது.

69-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் டேனியல் சிமா அற்புதமாக அடித்த கோலால் 3-1என முன்னிலை பெற்றது.

கூடுதல் நேரத்தில் ஒடிஸா வீரா் ஹியுகோபௌமஸ் அடித்த ஷாட் சென்னை கோல் கீப்பா் சமீக் மித்ரா கையில் பட்டு திரும்பிய நிலையில், அதை ராய் கிருஷ்ணா கோலாக்கினாா். இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் சென்னையின் எஃப்சி வென்றது.

ஒடிஸா அணியை சொந்த மண்ணில் சென்னை வீழ்த்துவது முதன்முறையாகும்.

X
Dinamani
www.dinamani.com