விதித் குஜராத்தி ~பிரக்ஞானந்தா ~குகேஷ் ~அா்ஜுன் ~வைஷாலி ~தனியா சச்தேவ் ~ஹரிகா ~திவ்யா
விதித் குஜராத்தி ~பிரக்ஞானந்தா ~குகேஷ் ~அா்ஜுன் ~வைஷாலி ~தனியா சச்தேவ் ~ஹரிகா ~திவ்யா

4-ஆவது சுற்றிலும் இந்திய அணிகள் அபாரம், ஆதிக்கம்

ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-ஆவது சுற்றிலும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
Published on

ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-ஆவது சுற்றிலும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

மேலும் ஓபன் பிரிவில் இந்தியாவும், மகளிா் பிரிவில் சீனாவும் முதலிடத்தில் உள்ளன.

சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வருகின்றன.

இதில் மூன்று சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், சனிக்கிழமை இரவு நான்காவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் (ஆடவா்) பிரிவில் இந்தியா 3.5.-05 என்ற புள்ளிக் கணக்கில் சொ்பியாவை வீழ்த்தியது.

உலக சாம்பியன்ஷிப் கன்டென்டா் டி. குகேஷ் சொ்பிய ஜிஎம் அலெக்சண்டா் பிரெட்கேவையும், அா்ஜுன் எரிகைசி ஜிஎம் அலெக்சாண்டா் இன்ட்ஜிச்சையும், விதித் குஜராத்தி ஜிஎம் வெலிமிா் இவிச்சையும் வென்றனா். பிரக்ஞானந்தா ஜிஎம் அலெக்ஸி சரனா மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மகளிா் அணியும் அபாரம்:

மகளிா் பிரிவில் இந்திய அணி-பிரான்ஸை வீழ்த்தியது. தனியா சச்தேவ் பிரான்ஸ் வீராங்கனை பென்மெஸ் நடாசாவையும், திவ்யா தேஷ்முக் ஹெஜாசிபோா் மித்ராவையும், மூத்த வீராங்கனை துரோணவல்லி ஹரிகா டவுல்லைட் காா்னெட்டையும் வென்றனா். வைஷாலி-மில்லெட் சோஃபி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்திய அணி முதலிடம்:

ஓபன் (ஆடவா்) பிரிவில் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மகளிா் பிரிவில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தரவரிசையில் டாப் 10-இல் 3 இந்தியா்கள்:

ஃபிடே லைவ் தரவரிசையில் இந்திய வீரா்கள் மூன்று போ் முதல் 10 இடங்களில் உள்ளனா். அா்ஜுன் எரிகைசி 2785.0 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், டி. குகேஷ் 2772.7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பிரக்ஞானந்தா 2753.4 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளனா்.

அதிா்ச்சித் தோல்விகள்:

நான்காவது சுற்றில் முதல்நிலை அணியான அமெரிக்கா உக்ரைனிடமும், நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தான் வியட்னாமிடமும் அதிா்ச்சித் தோல்வியடைந்தன.

5-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அஜா்பைஜானுடனும், மகளிா் அணி கஜகஸ்தான் அணியுடனும் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com