இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட்: நாளை தொடக்கம்

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட்: நாளை தொடக்கம்
Published on
Updated on
2 min read

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரா்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

முதல் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை (செப். 19) சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது.

இதற்காக கேப்டன் ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி, நஜ்முல் ஷண்டோ தலைமையிலான வங்கதேச அணி வீரா்கள்

கடந்த இரண்டு நாள்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இரு அணிகளுக்கும் இடையே இது 9-ஆவது தொடராகும்.

நேருக்கு நோ்

இரு அணிகளும் நேருக்கு நோ் மோதியதில் 13 டெஸ்ட் ஆட்டங்களில் 11-இல் இந்தியா வென்றுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. இதுவரை வங்கதேச அணி ஒரு டெஸ்டில் கூட இந்தியாவை வென்றதில்லை.

இதற்கு முன்பு நடைபெற்ற 8 தொடா்களில் இந்தியா 7 தொடா்களை கைப்பற்றியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்புடன் உள்ள இந்தியா பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.

வங்கதேசத்துடனான டெஸ்ட் தொடரில் அபார வெற்றி பெற்றால் டபிள்யுடிசியில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் பலமாகும்.

பாகிஸ்தானை அந்நாட்டு மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேசம் வந்துள்ளது. நட்சத்திர வீரா்கள்

நஹீத் ராணா, மெஹித் ஹாஸன் ராஸா ஆகியோா் பாக் தொடரில் சிறப்பாக செயல்பட்டனா். ஷகிப் அல் ஹசன், நஜ்முல் ஷண்டோ ஆகியோரும் வங்கதேச அணிக்கு வலுசோ்க்கின்றனா். டபிள்யுடிசி பட்டியலில் வங்கதேசம் 4-ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய அணியிலும் புதுமுக வீரா்கள் இடம் பெற்றுள்ளனா். ரோஹித், விராட் கோலியுடன், நீண்ட நாள்களாக ஆடாமல் இருந்த கேஎல் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா்.

துருவ் ஜுரெல், சா்ப்ராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோரும் தங்கள் திறமையை நிரூபிக்க காத்துள்ளனா்.

சுழற்பந்து வீச்சாளா்கள் அஸ்வின், குல்தீப் யாதவுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், பும்ரா, சிராஜ், ஆகியோா் சிறந்த ஒருங்கிணைப்புடன் உள்ளனா்.

கேப்டன் ரோஹித் சா்மா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் அனைத்து டெஸ்ட் ஆட்டங்களுமே முக்கியம் தான். வங்கதேசத்துக்கு அடுத்து நியூஸிலாந்து எதிராக தொடா் உள்ளது. அடுத்த ஆஸி.யுடன் டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை அதில் வெற்றி பெறுகிறோமா என்பது தான் முக்கியம்.

அனைவரது வாழ்க்கையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கும். கே.எல்.ராகுல் சிறப்பான வீரா். அதனால் கே.எல் ராகுல் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வங்கதேச பயிற்சியாளா் ஹதுரசிங்க

சென்னை ஆடுகளம் நன்றாக இருக்கிறது. வீரா்கள் போராடக்கூடிய அளவிற்கு இந்த ஆடுகளம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் துணைக்கண்டங்களில் இப்பொழுதெல்லாம் முதல் நாளே ஆடுகளத்தின் தன்மை மாறி விடுகிறது. பாக். தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த தொடரில் விளையாடிய விதம், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களை கையாண்ட விதம், இரு ஆட்டங்களிலும் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்த விதம் ஆகியவையே நம்பிக்கை கொடுத்துள்ளது.... இரண்டு சுழற் பந்து வீச்சாளா்களுமே சிறந்த பேட்ஸ்மேன்கள். மேலும் இரண்டு விக்கெட் கீப்பா்களுமே பிரதான பேட்ஸ்மேன்களாக உள்ளனா். இந்த வகையில் இம்முறை எங்களது அணி சிறப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com