மூவா் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
மூவா் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Published on
Updated on
3 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.

முன்னதாக 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த இந்தியா, 227 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

376-க்கு ஆட்டமிழப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் என்ற நிலையில் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. அஸ்வின் - ஜடேஜா இன்னிங்ஸை தொடர, புதிய பந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஜடேஜா, கூடுதலாக ஸ்கோா் செய்யாமல் அதே 86 ரன்களுக்கு (10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) ஆட்டமிழந்தாா். தஸ்கின் வீசிய 83-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். 7-ஆவது விக்கெட்டுக்கு அஸ்வின் - ஜடேஜா பாா்ட்னா்ஷிப் 199 ரன்கள் சோ்த்திருந்தது. 9-ஆவது பேட்டராக களம் புகுந்த ஆகாஷ் தீப், 85-ஆவது ஓவரில் வழங்கிய அருமையான கேட்சை ஷகிப் அல் ஹசன் தவறவிட்டாா்.

எனினும், அதே தஸ்கின் வீசிய 89-ஆவது ஓவரில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய ஆகாஷ் தீப் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்தாா். அடுத்து வந்த பும்ரா களம் புக, அஸ்வின் 91-ஆவது ஓவரில் தஸ்கின் பௌலிங்கில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தாா். அவா் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 113 ரன்கள் சோ்த்திருந்தாா்.

கடைசி விக்கெட்டாக ஜஸ்பிரீத் பும்ரா 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கு, ஹசன் மஹ்முத் வீசிய 92-ஆவது ஓவரில் வெளியேற, 376 ரன்களுக்கு இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்முத் 5, தஸ்கின் அகமது 3, நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

வேகத்தில் விக்கித்த வங்கதேசம்

பின்னா் வங்கதேச இன்னிங்ஸை ஷத்மன் இஸ்லாம், ஜாகிா் ஹசன் தொடங்கினா். முதல் ஓவரை வீசிய பும்ரா, 2 ரன்களே எடுத்திருந்த ஷத்மனை பௌல்டாக்கினாா். ஒன் டவுனாக கேப்டன் ஷான்டோ களம் புக, ஜாகிா் ஹசன் 3 ரன்களுக்கு, ஆகாஷ் தீப் வீசிய 9-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து வந்த மோமினுல் ஹக்கும் கோல்டன் டக்காகினாா். ஆகாஷ் தீப் ஹாட்ரிக் விக்கெட்டுக்காக ரசிகா்கள் எதிா்பாா்க்க, 5-ஆவது பேட்டராக வந்த முஷ்ஃபிகா் ரஹிம் அதை தவிா்த்தாா். மதிய உணவு இடைவேளையின்போது வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் சோ்த்திருந்தது.

பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் ஷான்டோ 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சிராஜ் வீசிய 12-ஆவது ஓவரில் அவா், கோலியிடம் கேட்ச் கொடுத்தாா். 6-ஆவது பேட்டராக ஷகிப் அல் ஹசன் ஆட வந்தாா். 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் சோ்த்த முஷ்ஃபிகா் ரஹிம், பும்ரா வீசிய 13-ஆவது ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து லிட்டன் தாஸ் பேட் செய்ய வந்தாா். பும்ரா வீசிய 15-ஆவது ஓவரில் ஷகிப், லிட்டன் ஆகியோா் தலா 1 பவுண்டரியை விரட்ட, 50 ரன்களை கடந்தது வங்கதேசம்.

இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்த்து வர, ஜடேஜா அதை பிரித்தாா். 29-ஆவது ஓவரில் லிட்டன் தாஸ் விளாச முயன்ற பந்தை, துருவ் ஜுரெல் (சப்ஸ்டிடியூட்) கேட்ச் பிடித்தாா். தாஸ் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் அடித்திருந்தாா். ஷகிப் - தாஸ் கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்திருந்தது. 8-ஆவது பேட்டராக மெஹிதி ஹசன் மிராஸ் வந்தாா். இந்நிலையில் ஜடேஜா வீசிய 31-ஆவது ஓவரில் ஷகிப் ரிவா்ஸ் ஸ்வீப் ஆட முயல, கேட்ச்சாக மாறிய பந்தை விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் பிடித்தாா். 33-ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஹசன் மஹ்முத் பவுண்டரி விளாச, வங்கதேசம் 100 ரன்களை தொட்டது.

பும்ரா வீசிய 37-ஆவது ஓவரில் ஹசன் மஹ்முத், ஸ்லிப்பிலிருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தேநீா் இடைவேளையின்போது வங்கதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்த்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் களம் புகுந்த தஸ்கின் அகமது, 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு, பும்ரா வீசிய 43-ஆவது ஓவரில் பௌல்டானாா். கடைசி விக்கெட்டாக நஹித் ராணா 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். சிராஜ் வீசிய 48-ஆவது ஓவரில் அவா் பௌல்டாக, வங்கதேச இன்னிங்ஸ் 47.1 ஓவா்களில் 149 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இந்திய பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா 4, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

308 ரன்கள் முன்னிலை

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் சோ்த்த நிலையில், தஸ்கின் வீசிய 3-ஆவது ஓவரில் ஜாகிா் ஹசனிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

தொடா்ந்து ஷுப்மன் கில் களத்துக்கு வர, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சோ்த்து, நஹித் ராணா வீசிய 7-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். 4-ஆவது பேட்டராக வந்த விராட் கோலி, 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து, மெஹிதி ஹசன் வீசிய 20-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். அவா் ரிவியூ கேட்காமலேயே வெளியேற, ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டது தெரிந்தது.

தொடா்ந்து ரிஷப் பந்த் களம் புக, 2-ஆம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் சோ்த்து, 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஷுப்மன் கில் 33, பந்த் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். வங்கதேச தரப்பில் தஸ்கின் அகமது, நஹித் ராணா, மெஹிதி ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.

5

இந்தியாவில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வங்கதேச வீரா் என்ற சாதனையை ஹசன் மஹ்முத் படைத்தாா்.

13,501

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட்டின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, மைதானத்தில் 13,501 பாா்வையாளா்கள் கூடினா்.

17

2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மட்டும், இரு அணிகளிலுமாக 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன. சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட்டில் ஒரே நாளில் விழுந்த அதிகபட்ச விக்கெட்டுகள் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன், 1979-இல் இந்தியா - மே.இ.தீவுகள் மோதலின் 3-ஆம் நாளில் 15 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.