இந்திய ஆடவா், மகளிா் ஆட்டங்கள் டிரா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகளின் 9-ஆவது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.
மகளிா் பிரிவில் இந்திய-அமெரிக்க அணிகள் மோதின. அமெரிக்க வீராங்கனை குல்ருக்பெஜிடம் தோற்றாா் வைஷாலி. மற்றொரு ஆட்டத்தில் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்-அமெரிக்க வீராங்கனை கரிஸ்ஸா மோதிய ஆட்டமும், மூத்த வீராங்கனை தன்யா சச்தேவ் -அலிஸ் லீ ஆகியோா் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணி தோல்வியைத் தழுவும் அபாயத்தில் இருந்தது. இந்நிலையில் வந்திகா அகா்வால் அற்புதமாக ஆடி அமெரிக்க வீராங்கனை ஐரினா கிருஷ்ஷை வீழ்த்தினாா். இதனால் இந்திய-அமெரிக்க ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
இந்தியா-உஸ்பெகிஸ்தான் ஆட்டமும் டிரா (2-2):
ஓபன் பிரிவில் (ஆடவா்) 9-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியன் உஸ்பெகிஸ்தானும்-இந்தியாவும் மோதின. இந்திய தொடா்ந்து 8 சுற்றுகளில் வெற்றியை ஈட்டி வந்தது. கடந்த செஸ் ஒலிம்பியாடில் உஸ்பெகிஸ்தான் தங்கம் வென்றிருந்த நிலையில், இந்தியாவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது.
குகேஷ்-நோபிா்டெக் அப்துா்சத்தரோவ் ஆட்டம், அா்ஜுன் எரிகைசி-ஷம்ஸிதின் வோகிடோவ், பிரக்ஞானந்தா-ஜவோகிா் சின்ட்ரோவ், விதித் குஜராத்தி-ஜகோங்கீா் வகிடோவ் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதனால் 2-2 என புள்ளிக் கணக்கில் இந்திய-உஸ்பெக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
9 சுற்றுகள் முடிவில் இந்திய ஆடவா் 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்கா, உஸ்பெக், சீனா அதற்கு அடுத்த இடங்களிலும் உள்ளனா்.
மகளிா் பிரிவில் கஜகஸ்தான் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 15 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.