2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடக்குமா? ஆர்வம் காட்டாத இந்திய ஒலிம்பிக் சங்கம்!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க அதற்கான நகரத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்னும் தேர்வு செய்யாமல் உள்ளது.
ஒலிம்பிக்
ஒலிம்பிக்
Published on
Updated on
2 min read

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து 1 ஆண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அதற்கான நகரத்தைத் தேர்வு செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐஓசி) இந்தியா அனுப்பாமல் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரமாக அகமதாபாத் இருக்கும் என்று தகவல்கள் வெளியான போதிலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் எந்த முறையான உறுதிப்படுத்தலும் அனுப்பப்படவில்லை.

இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை எந்த நகரத்தையும் தேர்வு செய்து அனுப்பவில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முன்னெடுப்பில் இருக்கும் இந்தோனேசியா, துருக்கி போன்ற நாடுகள், அதற்கான நகரங்களை முன்னரே தேர்வு செய்து அனுப்பியுள்ளன.

எந்தெந்த நாடுகள் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளன என்ற அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிடாத போதிலும், இரட்டை இலக்கத்தில் இதுவரை விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதன் தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உள்மோதல்கள் இந்த விஷயத்தில் தாமதம் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்த விருப்பமுள்ள பல நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் சந்திப்பினை நடத்தியுள்ளன. ஆனால், இந்தியா அவ்வாறு எந்த சந்திப்பையும் நடத்தவில்லை.

இந்தியா தற்போது வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் ஏலம் எடுப்பதற்கான அமைப்பை நிறுவாமல் இருப்பது விஷயங்களை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த சிக்கல் 2030 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் வரை நீடிக்கும் என்றும், ஒலிம்பிக் கமிட்டியுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் விளையாட்டுத் துறையினர் சார்பில் கூறப்படுகிறது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நிர்வாகக் குழுவிற்கிடையே உள்ள பிரச்னைகள் ஏலத்தை பாதிக்குமா என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கேட்டபோது, “பெரிய இளைஞர் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முன்வருவது எங்களுக்கு மகிழ்வாக உள்ளது. ஆனால், இதனை முன்னெடுத்துச் செல்ல தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ஆதரவு இந்தியாவிற்குத் தேவை” என்று தெரிவித்துள்ளனர்.

நிர்வாகக் குழுவினரின் ஆட்சேபனைகளை மீறி ஜனவரி 2024 இல் தலைமைத் தேர்தல் அதிகாரியை (சிஇஓ) நியமித்ததில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் முரண்பாடுகள் இருந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 2022 இல் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் மற்றும் சிஇஓ நியமனம் போன்றவவை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்த கருத்தில், ”நேர்மையான ஏல நடைமுறைக்கு வலுவான தேசிய ஒலிம்பிக் கமிட்டி தேவை என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்று கூறியிருந்தது.

கடந்த சில மாதங்களில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா மற்றும் நிர்வாகக் குழுவினருக்கிடையே மோதல் அதிகரித்ததால் அமைப்பின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. மேலும், நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் ஈமெயில் டொமைன் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த ஜனவரி 5, 2024-க்கு பின்னர் எந்த நிர்வாகக் குழு கூட்டமும் நடத்தப்படவில்லை.

”ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பமுள்ள இந்தியா உள்பட பல நாடுகள் உறுதியற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றன” என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதன்மூலம், எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டோ, போட்டிகளோ குறிப்பிடாமல் ஒலிம்பிக் போட்டிகளுக்கான திட்டங்களை ஆராய்ந்து மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com