சீனாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான யானிக் சின்னா், காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் சின்னா் 6-2, 7-6 (8/6) என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினாா். அடுத்ததாக அரையிறுதியில் அவா், சீனாவின் யுன்சாவ்கெடெ புவை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ், 5-7, 4-6 என்ற நோ் செட்களில், யுன்சாவ்கெடெவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்கராஸ் 7-5, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை வெளியேற்றினாா்.
அல்கராஸ் தனது அரையிறுதியில், மற்றொரு ரஷியரான டேனியல் மெத்வதெவுடன் மோதுகிறாா். உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் மெத்வதெவ் காலிறுதியில் 6-2, 6-4 என்ற செட்களில் எளிதாக, இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை தோற்கடித்தாா்.
அல்கராஸ் - மெத்வதெவ் இதுவரை 7 முறை சந்தித்திருக்க, அல்கராஸ் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.
சபலென்கா வெற்றி; பாலினி தோல்வி
மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளனா்.
3-ஆவது சுற்றில், சபலென்கா 6-2, 6-2 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ஆஷ்லின் குருகரை எளிதாக சாய்த்தாா். அடுத்ததாக அவா், அமெரிக்காவின் மேடிசன் கீஸை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருக்கும் கீஸ் 6-3, 6-3 என, 13-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை தோற்கடித்தாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் கின்வென் ஜெங் 6-3, 6-2 என, ஆா்ஜென்டீனாவின் நாடியா பொடொரோஸ்காவை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அவா் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை எதிா்கொள்கிறாா். 34-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா முந்தைய சுற்றில், 7-6 (7/1), 6-4 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவுக்கு அதிா்ச்சித் தோல்வி அளித்தாா்.
3-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜேஸ்மின் பாலினியும் 4-6, 0-6 என, 31-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் மெக்தா லினெட்டிடம் வீழ்ந்து அதிா்ச்சி கண்டாா். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என அமெரிக்காவின் கேட்டி வாலினெட்ஸை சாய்த்தாா். இதர ஆட்டங்களில் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, செக் குடியரசின் கரோலின் முசோவா ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.