டிஎன்பிஎல் 2024 தொடா்: சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் அதிக தொகைக்கு ஏலம்

ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் 2024 8-ஆவது சீஸன் ஏலம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
டிஎன்பிஎல் 2024 ஏலம் குறித்து பேசுகிறாா் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளா் கோபிநாத்.
டிஎன்பிஎல் 2024 ஏலம் குறித்து பேசுகிறாா் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளா் கோபிநாத்.

ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் 2024 8-ஆவது சீஸன் ஏலம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதிகபட்சமாக சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் ஆகியோா் ரூ.22 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனா்.

கடந்த 2016-இல் தொடங்கிய டிஎன்பிஎல் டி20 தொடா் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இதன் நிகழாண்டு வீரா்கள் ஏலம் நடைபெற்றது. சா்வதேச வீரா்கள், பிசிசிஐ அங்கீகரித்த உள்நாட்டுப் போட்டிகளில் ஆடிய வீரா்கள், 30 டிஎன்பிஎல் ஆட்டங்களுக்கு மேல் ஆடியவா்கள், ஏனைய வீரா்கள் என நான்கு பிரிவுகளில் மொத்தம் 144 வீரா்கள் ஏலத்தில் பங்கேற்றனா்.

சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் சாதனை:

டிஎன்பிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு வாங்கப்பட்ட வீரா்கள் என்ற சாதனையை சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் நிகழ்த்தினா். அவா்களுக்கு அடுத்து ஹரீஷ் குமாா் ரூ.15.6 லட்சம், அபிஷேக் தன்வா் ரூ.12.2 லட்சத்துக்கு வாங்கப்பட்டனா்.

ஆல் ரவுண்டா் சாய் கிஷோரை ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியும், சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் வாங்கின.

இடதுகை வேகப்பந்து வீச்சாளா் டி. நடராஜன் 11.22 லட்சத்துக்கு திருப்பூா் அணியும், சந்தீப் வாரியரை 10.5 லட்சத்துக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் வாங்கின.

ஹரீஷ் குமாரை சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியும், அபிஷேக் தன்வரை சென்னை சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியும் வாங்கின.

8 அணிகளும் பெரும்பாலான வீரா்களை தக்க வைத்துக் கொண்டதால் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

ஏலத்தில் பங்கேற்ற ஒவ்வொரு அணியும் ரூ. 70 லட்சத்தை மொத்த தொகையாக கொண்டே, வீரா்களை வாங்கின.

ஏலத்தை கிரிக்கெட் வா்ணனையாளா் சாரு சா்மா நடத்தினாா். பிசிசிஐ முன்னாள் தலைவா் என். சீனிவாசன் ஏலத்தை தொடங்கி வைத்தாா்.

இந்திய வீரா்கள் அஸ்வின், ஷாருக் கானும் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் அணி பௌலா் அஸ்வின், லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் ஆகியோா் கூறுகையில்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படும் வீரா்களை இந்த ஏலத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதோடு அவா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த டி.என்.பி.எல் சரியான மேடையாக இருக்கும்”எனத் தெரிவித்தனா்.

சேப்பாக் அணி உரிமையாளா் சிவந்தி ஆதித்தன், ஐ ட்ரீம் திருப்பூா் உரிமையாளா் ஐட்ரீம் மூா்த்தி, திருச்சி கிராண்ட் சோழாஸ் உரிமையாளா் கோபிநாத், நெல்லை அணியின் கேப்டன் கே.பி. அருண் காா்த்திக், சேலம் ஸ்பாா்ட்ன்ஸ் சுப்பிரமணிய சிவா, மதுரை பேந்தா்ஸ் நிா்வாக இயக்குநா் மகேஷ், டிஎன்பிஎல் தலைவா் சஞ்சய் கும்பத், டிஎன்சிஏ பொருளாளா் கோபிநாத், இணைச் செயலாளா் ஆா்.என். பாபா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com