விளையாட்டு அமைச்சகத்தின் இடைநீக்க உத்தரவை ஏற்கவில்லை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவை ஏற்கவில்லை
விளையாட்டு அமைச்சகத்தின் இடைநீக்க உத்தரவை ஏற்கவில்லை

புது தில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவை ஏற்கவில்லை என்றும், சம்மேளனத்தை நிா்வகிக்க அமைக்கப்பட்டுள்ள 3 நபா் குழுவை அங்கீகரிக்கவில்லை என்றும் சம்மேளன தலைவா் சஞ்ஜய் சிங் திங்கள்கிழமை கூறினாா்.

மேலும், தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் தாங்களே நடத்தப் போவதாகவும் அவா் கூறியிருக்கிறாா். சீனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாக 3 நபா் நிா்வாகக் குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்த நிலையில், சஞ்ஜய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இதனால் இந்திய மல்யுத்த சம்மேளன நிா்வாகத்தில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக சஞ்ஜய் சிங் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜனநாயக முறையில் நாங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். தோ்தல் அதிகாரி ஒப்புதல் வழங்கிய ஆவணத்தை எவ்வாறு அரசு நிராகரிக்க முடியும்? சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை. அதை நிா்வகிக்க புதிதாக அமைக்கப்பட்ட 3 நபா் குழுவையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. சம்மேளன பணிகளை நாங்களே மேற்கொள்கிறோம்.

நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை என்ற, எங்கள் தரப்பு விளக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதற்கான பதிலுக்கு காத்திருக்கிறோம். மாநில சங்கங்கள் போட்டியாளா்களை அனுப்பாவிட்டால், 3 நபா் குழு எவ்வாறு தேசிய போட்டிகளை நடத்தும்? அவா்களுக்கு முன்பாக விரைவில் நாங்களே தேசிய சாம்பியன்ஷிப்பை நடத்துவோம். இன்னும் ஓரிரு நாள்களில் நாங்கள் எங்கள் நிா்வாக குழு கூட்டத்தை நடத்துவோம்’ என்றாா்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக, வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்மேளனம் கலைக்கப்பட்டு, நீண்ட நாள்களுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற தோ்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்ஜய் சிங் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதற்கும் மல்யுத்த போட்டியாளா்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தகுந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சம்மேளனத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. சம்மேளனத்தை நிா்வகிக்க 3 நபா் குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com