சோயிப் மாலிக் - சானியா மிர்சா பிரிந்தது ஏன்?

சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் மறுமணம் செய்துள்ளார்.
சோயிப் மாலிக் - சானியா மிர்சா பிரிந்தது ஏன்?

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்  கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு இருவீட்டினர் ஒப்புக்கொண்டாலும் இந்திய வீராங்கனையான சானியா, பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரை மணப்பது நாட்டை அவமானப்படுத்துவதாகும் என எதிர்க்குரல்களும் கடுமையாக எழுந்தன.

ஆனால், இந்தக் குழப்பங்களைத் தாண்டி சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்வதில் சானியா மிர்சா உறுதியாக இருந்தார். நிச்சயிக்கப்பட்ட திருமணமும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தத் திருமணம் இரு நாட்டினருக்குமான இணக்கமான சூழலை மேம்படுத்தலாம் என்றே பலரும் கருத்து தெரிவித்தனர். 

திருமணத்திற்குப் பின் துபைக்கு குடியேறிய சோயிப் - சானியா இணை தங்கள் விளையாட்டின் மீதும் கவனம் செலுத்தி வந்தனர். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வரும்போது சானியா மிர்சா தன் கணவருக்கு ஆதரவாக அமர்ந்திருப்பார். இதனால், பல இந்திய ரசிகர்கள் “இந்தியாவுக்கு துரோகம் செய்கிறார்” என சமூக வலைதளங்களில் சானியாவை கடும் சொற்களால் திட்டுவார்கள். ஒருமுறை, இந்தியா - பாக். போட்டியின்போது சானியா தன் எக்ஸ் தளத்தில், “ இன்னும் 24 மணிநேரத்துக்குள் போட்டி துவங்கப் போகிறது. பாதுகாப்பிற்காக அடுத்த சில நாள்களுக்கு இங்கிருக்க மாட்டேன். ஆனால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இது சாதாரணமான கிரிக்கெட் போட்டிதான்” என எங்கெல்லாம் தங்கள் உறவு பாதிக்கப்படும் சூழல் இருக்குமோ அப்போது சானியா மிர்சா  தன் நிலைப்பாட்டை பதிவு செய்து சர்ச்சைகளிலிருந்து விலகிவிடுவார். அந்த அளவிற்கு சோயிப் மாலிக் - சானியா இணையின் புரிதலும் பேசப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சானியா - சோயிப்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இது உண்மையில்லை என்பதுபோல் அவ்வபோது இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே 2022 ஆம் ஆண்டு சோயிப் மாலிக்கும் பிரபல நடிகை ஒருவரும் உறவிலிருப்பதாகத் தகவல் வெளியானபோது பலரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சில மாதங்களில் இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவைப் பின் தொடர்வதை சோயிப் மாலிக் நிறுத்திக்கொண்டது இதன் உண்மைத்தன்மையை அதிகரித்தது. குறிப்பாக, அந்த நேரத்தில் சானியா தன் மகன் இஷான் உடன் துபையில் தனியாகத்தான் வசித்து வந்திருக்கிறார்.

சோயிப் மாலிக் - சனா ஜாவத் இணை.
சோயிப் மாலிக் - சனா ஜாவத் இணை.

இந்தப் பிரச்னை உச்சகட்டத்தை அடைந்தபோது சானியா மிர்சா தன் இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" எனப் பதிவிட்டது மேலும் குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில்,  சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தை மறுமணம் செய்துள்ளார். இத்திருமண புகைப்படங்கள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏன் பிரிந்தனர்?

இருவரின் தனிப்பட்ட திறனாலும் அவரவர் துறைகளில் சிறப்பான இடத்தையே பிடித்திருந்தனர். இந்திய - பாக். சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே அவர்கள் துபையில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. அங்கு சானியா மிர்சா டென்னிஸ் அகாதெமி ஒன்றையும் நடத்தி வருகிறார். 12 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், இரு நாட்டிலிருக்கும் வெறுப்பாளர்களின் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் சிறந்த தம்பதிகளாகவே இருந்திருக்கின்றனர். ஆனால், இவர்களின் பிரிவுக்கு சோயிப் மாலிக்தான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. காரணம், அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததுதான் எனச் சொல்கிறார்கள்.

அதேநேரம், கருத்து வேறுபாடுகளால் உறவுப் பூசல்களில் இருந்த சானியா மிர்சா பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்யும் ‘குலா’ என்கிற  இஸ்லாமிய முறைப்படி இந்த திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் என்கின்றனர் சிலர். குலா முறையில்தான் இந்த விவாகரத்து நடந்தது என்பதை சானியா குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

சோயிப் மாலிக் மறுமணம் செய்துகொண்ட நடிகை சனா ஜாவத்துக்கும் இது மறுமணம்தான். சனா கடந்த 2020 ஆம் ஆண்டு உமைர் ஜஸ்வால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவரும் கருத்து வேறுபாடால் 2023-ன் துவக்கத்தில் பிரிந்தனர். இந்தப் பிரிவுக்குக் காரணமாக இருந்தது சோயிப்தான் என்கிற பேச்சும் உண்டு.

தன் மகன் இஷானுடன் சானியா மிர்சா!
தன் மகன் இஷானுடன் சானியா மிர்சா!

என்ன வேண்டுமானாலும் நிகழ்த்திருக்கலாம்.... ஆனால், கடும் சர்ச்சைகளுக்கு நடுவே திருமணம் செய்துகொண்ட சோயிப் - சானியா இணையின் இந்தப் பிரிவு இருநாட்டில் வசிக்கும் இருவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே காண முடிகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com