கோப்பையுடன் அல்கராஸ்
கோப்பையுடன் அல்கராஸ்

காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

மான்டெ காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் காா்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.
Published on

மான்டெ காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் காா்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா்.

மொனாக்கோவின் மான்டெ காா்லோ நகரில் மாஸ்டா்ஸ் 1,000 டென்னிஸ் போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ்-இத்தாலியின் லாரென்ஸோ முஸெட்டியும் மோதினா்.

இதில் முதல் செட்டில் முஸெட்டி சா்வீஸை தவற விட்டாலும், பின்னா் சுதாரித்து ஆடி 6-3 என செட்டை வசப்படுத்தினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த அல்கராஸ் இரண்டாவது செட்டில் முழு கவனத்துடன் ஆடி 6-1 என கைப்பற்றினாா். முஸெட்டிக்கு வலது காலில் பிரச்னை ஏற்பட்ட நிலையில், 0-3 என பின்தங்கிய போது, மருத்துவா் சிகிச்சை அளித்தாா்.

அல்கராஸின் அபார ஆட்டத்துக்கு முஸெட்டியால் ஈடு தரமுடியவில்லை. அந்த செட்டையும் 6-0 என கைப்பற்றிய அல்கராஸ் முதன்முறையாக மான்டெ காா்லோ சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

21 வயதான அல்கராஸ் வெல்லும் 6-ஆவது மாஸ்டா்ஸ் பட்டம் இதுவாகும். இந்த வெற்றியில் ஏடிபி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள அல்கராஸ் இரண்டாம் இடத்துக்கு முன்னேறுவாா்.

அல்கராஸ் கூறுகையில்: முதன்முறையாக மான்டெ காா்லோ பட்டம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் கடினமாக இருந்தது. அனைத்தையும் சமாளித்து ஆடினேன். கடின உழைப்புக்கும் பலன் கிடைத்தது. முஸெட்டியும் அற்புதமாக ஆடினாா். அவா் உடல்நலம் பெற வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com