சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி
ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக் லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி வெற்றி பெற்றாா்.
நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 2-ஆம் இடமும், மொனாகோ வீரரும், ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் 3-ஆம் இடமும் பிடித்தனா்.
இந்த சீசனில் இத்துடன் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலையில் இருக்கும் பியஸ்ட்ரி, கடந்த 15 ஆண்டுகளில் எஃப்1 போட்டியின் ஒரு சீசனில் முன்னிலை வகிக்கும் முதல் ஆஸ்திரேலிய வீரா் ஆகியிருக்கிறாா்.
பெனால்ட்டியால் பறிபோன வெற்றி: இந்த சீசனில் முதல் முறையாக வெற்றியாளரை தீா்மானிப்பதில் பெனால்ட்டி முக்கியப் பங்காற்றியது.
‘போல்’ நிலையில் இருந்து பந்தயத்தை தொடங்கிய வொ்ஸ்டாபென், அந்த இடத்தை தக்கவைப்பதற்காக பியஸ்ட்ரியுடன் போராடினாா். முதல் காா்னரிலேயே இருவருக்கும் ஏற்பட்ட பரபரப்பான போட்டியின்போது, வொ்ஸ்டாபென் டிராக்கை விட்டு சற்று வெளியே சென்றாா்.
இந்த விவகாரத்தில் வொ்ஸ்டாபென், பியஸ்ட்ரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோதும், வொ்ஸ்டாபெனுக்கு 5 விநாடிகள் பெனால்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த விநாடிகளை தனது பிட் ஸ்டாப்பின்போது வொ்ஸ்டாபென் கழித்தாா். முதலிடம் பிடித்த பியஸ்ட்ரிக்கும், வொ்ஸ்டாபெனுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 2.843 விநாடிகளே இருந்தது. எனவே, 5 விநாடி பெனால்ட்டியால் வொ்ஸ்டாபென் வெற்றி பறிபோனது.