பஹல்காம் தாக்குதலுக்கு முன்பே பாக். வீரருக்கு அழைப்பு விடுத்தேன்: நீரஜ் சோப்ரா

பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த சர்ச்சைக்கு நீரஜ் சோப்ரா அளித்த பதில்...
நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம்.
நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம். கோப்புப் படம்.
Published on
Updated on
2 min read

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை இந்தியாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததுக்கு நீரஜ் சோப்ரா மீது பரவும் வெறுப்புக்கு பதிலளித்துள்ளார்.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பெங்களூரில் வரும் மே மாதம் 24ஆம் தேதி நீரஜ் சோப்ரா கிளாசிக் (என்சி கிளாசிக்) என்ற பெயரில் போட்டிகளை நடத்துகிறார்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை இந்தியாவின் தங்க மகன் என்றழைக்கப்படும் நீரஜ் சோப்ரா கடந்த திங்கள் கிழமை (ஏப்.21) அழைப்பு விடுத்திருந்தார்.

தற்போது, பெஹல்காமில் (ஏப்.22) நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பலரும் நீரஜ் சோப்ராவையும் அவரது தாயையும் தேசத்துரோகி என மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

தாக்குதலுக்கு முன்பே அழைத்திருந்தேன்

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீரஜ் சோப்ரா கூறியதாவது:

நான் எப்போதும் குறைவாகவே பேசுவேன். ஆனால், அதற்காக எனக்கு தவறெனப்பட்டதைக் குறித்து பேசவேமாட்டேன் என நினைக்காதீர்கள். என் நாட்டின் மீதான காதல், என் குடும்பம் மீதான மரியாதை, கௌரவத்திற்கு கெடுதல் விளைவிக்குமாறு பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டிக்கு அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்ததை பலரும் கேள்வி கேட்கிறார்கள். அதனால் என்மீது பலரும் அவதூறையும் வெறுப்பையும் பரப்புகிறார்கள். அப்படி பேசுபவர்கள் எங்களது குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை.

அர்ஷதுக்கு அழைப்பு விடுக்க காரணம் அவர் ஒரு விளையாட்டு வீரர், நான் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் மட்டுமே. அதில் வேறு எதுவுமே இல்லை. என்சி கிளாசிக் போட்டியில் உலகத் தரமான வீரர்கள் பங்கேற்க வேண்டும் என நினைத்தேன். அனைத்து போட்டியாளர்களையும் நான் திங்கள் கிழமையே (ஏப்.21) அழைப்பு விடுத்தேன். பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாகவே இதைச் செய்திருந்தேன்.

விளக்கம் சொல்வது வலிக்கிறது

இந்த சம்பவங்கள் எல்லாம் கடந்த 48 மணி நேரத்தில் நடந்தவையே. இதற்கு முன்பு அர்ஷத் நதீம் என்சி கிளாசிக் போட்டியில் பங்கேற்பது கேள்வியிலேயே இல்லை. எனது நாடும் அதன் ஆர்வமும் எப்போதும் எனக்கு முதன்மையானதாகவே இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுடன் சேர்த்து இந்தச் சம்பவத்தினால் நானும் பாதிக்கப்பட்டேன், கோபமும் அடைந்தேன். எனது நாடு இதற்காக நமது வலிமையை நிரூபித்து தக்க பதிலடி கொடுக்கும் எனவும் நம்புகிறேன்.

பல ஆண்டுகளாக நான் எனது நாட்டின் பெருமையை சுமந்து வருகிறேன். எனது நேர்மையை சந்தேகிப்பது வருத்தமளிக்கிறது. என்னையும் எனது குடும்பத்தினரையும் தேவையே இல்லாமல் சந்தேகிப்பவர்களுக்காக நான் விளக்கம் சொல்வது வலிக்கிறது.

நாங்கள் சாதாரண மனிதர்கள்

நாங்கள் சாதாரண மனிதர்கள். எங்களை எதிலும் சேர்க்காதீர்கள். பலவிதமான தவறான கருத்துகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. நான் பொதுவாக எதுவும் பேசமாட்டேன் என்பதால் அது உண்மையாகிவிடாது.

மக்கள் எப்படி தங்களது கருத்துகளை மாற்றிக்கொள்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. ஒர் ஆண்டுக்கு முன்பாக எனது அம்மாவின் கருத்துக்காக அவரது கபடமற்ற தன்மையையும் எளிமையையும் புகழ்ந்தார்கள். தற்போது அதே கருத்துக்காக அவரை நோக்கி வெறுப்பை உமிழ்கிறார்கள்.

மீண்டும் கடினமான உழைத்து நன்மதிப்பைப் பெறுவேன். ஜெய்ஹிந்த் எனக் கூறியுள்ளார்.

தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ராவின் தாய், ”அவரும் என் மகன் போலத்தான்”எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com