தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அண்மையில் கொச்சியில் நிறைவடைந்த ஃபெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாகச் செயல்பட்டோர் இந்த அணியில் இடம் பிடித்திருக்கின்றனர்.
ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீரர் அவினாஷ் சேபிள், அதிலேயே மகளிர் பிரிவில் களம் காணும் பாருல் செüதரி, 5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் குல்வீர் சிங், 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த அனிமேஷ் குஜுர், மும்முறை தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீண் சித்ரவேல் ஆகியோர் இந்த அணியில் இருக்கும் குறிப்பிடத்தக்க போட்டியாளர்கள் ஆவர்.
மகளிர் ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி, ஃபெடரேஷன் கோப்பை போட்டியின்போது தங்கம் வென்றாலும், ஆசிய சாம்பியன்ஷிப்புக்கான தகுதி இலக்கை எட்டவில்லை. எனினும் மார்ச் மாதம் இந்தியா ஓபன் போட்டியில் அந்த இலக்கை கடந்ததன் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குண்டு எறிதலில் தேசிய சாதனையாளரான தஜிந்தர்பால் சிங் தூர், இந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் 2}ஆம் இடம் பிடித்ததால் ஆசிய சாம்பியன்ஷிப்புக்கு தவிர்க்கப்பட்டுள்ளார். கம்பு ஊன்றித் தாண்டுதலில் தாம் படைத்த தேசிய சாதனையை தாமே முறியடித்த தேவ்குமார் மீனாவும் இதில் சேர்க்கப்படவில்லை. ஆசிய சாம்பியன்ஷிப்புக்கான தகுதி அளவை அவர் எட்டவில்லை.
கடைசியாக தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் 3}ஆம் இடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது.
நீரஜ் சோப்ரா இல்லை: இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை.
டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப் ஆகியவற்றுக்கு தயாராவதற்காக அவர் இந்தப் போட்டியை தவிர்க்கிறார். கடைசியாக 2017}இல் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அதன் பிறகு இதில் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.