
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுடனான கருத்து மோதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. சிறந்த வெற்றியாகக் கொண்டாடப்படும் இந்தப் போட்டியின் கடைசி வரையில் த்ரில் என்பது சிறிதும் குறையவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில், இந்திய முன்னாள் வாசிம் ஜாஃபரை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமூக ஊடகத்தில் நக்கலுடன் வம்பிழுத்தார்.
இருப்பினும், ஐந்தாவது நாள் தொடரில் இந்தியா வெற்றியடைந்தவுடன், பதிலுக்கு வாகனை ஜாஃபரும் நக்கலுடன் பதிலளித்தார்.
தொடர்ந்து, இருவரும் மாறிமாறி நகைச்சுவையாக கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இவர்கள் இருவரின் வார்த்தைப் போரை இஸ்ரேல் - காஸா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் போர்களுடன் இணையவாசிகள் ஒப்பிட்டு, விமர்சித்தனர்.
இதனையடுத்து, இணையவாசிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்த ஜாஃபர், எனக்கும் வாகனுக்கும் இடையே டிரம்ப் போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை; உண்மைக்கு புறம்பானவையும்கூட. எங்கள் இருவரின் சமூக ஊடகப் போர் தொடரும் என்று பதிவிட்டார்.
பல்வேறு நாடுகளிடையேயான போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறிவரும் நிலையில், ஜாஃபரின் இந்தப் பதிவு பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் வரை வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் சமமாகவே இருந்தது. இருப்பினும், நான்காம் நாளில் ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட்டின் அசத்தலான சதங்களால் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்துக்கு அதிகமானது.
போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட, இங்கிலாந்து தொடரை கைப்பற்றப் போகிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், கடைசி நாளில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.