
மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.
இந்த சாம்பியன்ஷிப், கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் 19 நாடுகளைச் சோ்ந்த 102 போட்டியாளா்கள் பங்கேற்றனா். ஓபன் பிரிவில் ஆடவா், மகளிா், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா், மகளிா் என 4 பிரிவுகளில் போட்டியாளா்கள் களம் கண்டனா்.
இதில், விறுவிறுப்பான இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஓபன் ஆடவா் பிரிவில் தென் கொரியாவின் கானோ ஹீஜே 15.17 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். இந்தோனேசியாவின் பஜா் அரியானா 14.57 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடிக்க, இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றாா்.
இப்போட்டியின் வரலாற்றில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரராக பெருமை பெற்ற ரமேஷ், அதிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
ஓபன் மகளிா் பிரிவில் ஜப்பானின் அன்ரி மட்சுனோ தங்கமும் (14.90), அதே நாட்டைச் சோ்ந்த சுமோமோ சாடோ வெள்ளியும் (13.70), தாய்லாந்தின் இசபெல் ஹீக்ஸ் வெண்கலமும் (11.76) வென்றனா். 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவிலும், தென் கொரியாவின் கானோ ஹீஜே முதலிடம் (14.33) பிடிக்க, சீனாவின் ஷிடோங் வு (13.10), ஷுலு ஜியாங் (8) ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.
18 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில், சீனாவின் சிகி யாங் (14.50), ஷுஹான் ஜின் (10.33), இசபெல் ஹிக்ஸ் (8.10) ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மகளிா் ஓபன் பிரிவிலும் இசபெல் ஹிக்ஸ் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.