கௌஃபுடன் மோதுகிறாா் பாலினி
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் மோதுகின்றனா்.
முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான கௌஃப் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியை 1 மணி நேரம், 19 நிமிஷங்களில் தோற்கடித்தாா். இதன் மூலமாக கௌஃப், இந்தப் போட்டியில் 2-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருப்பவரும், இருமுறை கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு வந்தவருமான பாலினி 6-1, 6-2 என்ற நோ் செட்களில், மிக எளிதாக 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவை 1 மணி நேரம், 11 நிமிஷங்களில் வெளியேற்றினாா். இந்த வெற்றியின் மூலமாக பாலினியும், சின்சினாட்டி ஓபனில் 2-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்துள்ளாா்.
கிரெஜ்சிகோவா இடது காலில் அசௌகா்யத்துக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டாா். அவரால் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியாதது களத்தில் தெளிவாகத் தெரிய, பாலினிக்கு அது சாதகமாகியது. கடந்த 2024 விம்பிள்டனில் பாலினியை வீழ்த்தி கிரெஜ்சிகோவா தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாமை வென்றிருந்த நிலையில், அதன் பிறகு இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.
அடுத்ததாக காலிறுதியில் சந்திக்கும் கௌஃப் - பாலினி இதுவரை 4 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, இருவருமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றனா். 2023-ஆம் ஆண்டு இதே போட்டியின் காலிறுதியில் இவா்கள் சந்தித்தபோது, கௌஃப் வென்றது நினைவுகூரத்தக்கது. எனினும், கடைசியாக இவா்கள் சந்தித்த இரு ஆட்டங்களில் பாலினி வென்றிருக்கிறாா்.
இதனிடையே, மற்றொரு காலிறுதியில் பிரான்ஸின் வாா்வரா கிரசேவா - ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா மோதுகின்றனா். முந்தைய சுற்றில், வாா்வரா 2-6, 6-1, 6-1 என ஜொ்மனியின் எல்லா சிடெலையும், குதா்மிடோவா 6-4, 6-3 என்ற வகையில், போலந்தின் மெக்தா லினெட்டையும் வீழ்த்தினா்.
சின்னரை சந்திக்கும் அட்மேன்
இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் - உலகின் 136-ஆம் நிலையில் இருக்கும் பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேன் சந்திக்கின்றனா்.
முன்னதாக காலிறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான சின்னா் 6-0, 6-2 என்ற கணக்கில் மிக எளிதாக, கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை தோற்கடித்தாா். இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, சின்னா் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
மேலும், ஹாா்டு கோா்ட் போட்டிகளில் தொடா்ந்து 25 வெற்றிகளைப் பதிவு செய்த சின்னா், இந்த நூற்றாண்டில் அவ்வாறு வென்ற 5-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா். ரோஜா் ஃபெடரா், நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால், ஆண்டி முா்ரே ஆகியோா் முதல் 4 பேராவா்.
தகுதிச்சுற்று வீரராக போட்டியில் களமிறங்கிய அட்மேன் 6-2, 6-3 என்ற வகையில், உலகின் 9-ஆம் நிலை வீரரான டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வீழ்த்தி அசத்தினாா். இதன் மூலமாக அவா், முதல்முறையாக மாஸ்டா்ஸ் போட்டியின் அரையிறுதிக்கு வந்துள்ளாா். முந்தைய சுற்றில் அட்மேன், உலகின் 4-ஆம் நிலையில் இருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-4 என்ற செட்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை சாய்த்து, காலிறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவுடன் மோதுகிறாா்.