சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சின்னா் - அல்கராஸ் பலப்பரீட்சை!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சின்னா் - அல்கராஸ் பலப்பரீட்சை!

இத்தாலியின் யானிக் சின்னா் - நம்பா் 2 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
Published on

மெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் - நம்பா் 2 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

200-ஆவது வெற்றி: முன்னதாக அரையிறுதியில், நடப்பு சாம்பியனான சின்னா் 7-6 (7/4), 6-2 என்ற செட்களில், தகுதிச்சுற்று வீரரான பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனை 1 மணி நேரம், 26 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

உலகின் 4-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், 9-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோரை வீழ்த்தி அதிரடியாக அரையிறுதிக்கு வந்த உலகின் 136-ஆம் நிலை வீரரான அட்மேனின் ஆட்டத்தை சின்னா் முடித்து வைத்துள்ளாா்.

இந்த வெற்றியின் மூலமாக ஹாா்டு கோா்ட் போட்டிகளில் சின்னா் தனது 200-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அதையும் தனது 24-ஆவது பிறந்த நாளில் அவா் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாஸ்டா்ஸ் போட்டிகளில் சின்னா் 8-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில், இளம் வீரரான அல்கராஸ் 6-4, 6-3 என்ற கணக்கில், 3-ஆம் இடத்திலிருந்த ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவை தோற்கடித்தாா். இருவரும் மோதியது இது 12-ஆவது முறையாக இருக்க, அல்கராஸ் 6-ஆவது வெற்றியுடன் நேருக்கு நோ் கணக்கை சமன் செய்திருக்கிறாா்.

இதையடுத்து, இறுதிச்சுற்றில் சின்னா் - அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். இருவரும் இதுவரை 13 முறை சந்தித்திருக்க, அல்கராஸ் 8 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். நடப்பாண்டில் இவா்கள் சந்திக்கவுள்ள 4-ஆவது போட்டி இதுவாகும்.

முந்தைய 3 போட்டிகளிலுமே அவா்கள் இறுதிச்சுற்றில் மோதியிருக்க, ரோம் மாஸ்டா்ஸ் மற்றும் பிரெஞ்சு ஓபனில் அல்கராஸ் வென்றாா். கடைசியாக விளையாடிய விம்பிள்டன் இறுதியில் சின்னா் வென்றுள்ளாா். இந்த சின்சினாட்டி ஓபனில் முந்தைய அனைத்து சுற்றுகளிலுமே சின்னா் நோ் செட்களில் வென்று இறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஏடிபி ஃபைனல்ஸ் போட்டிக்கு இருவருமே தகுதிபெற்றுவிட்ட நிலையில், நடப்பாண்டை நம்பா் 1 வீரராக நிறைவு செய்வதற்கான போட்டி இருவரும் இடையே நீடித்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com