டுரண்ட் கோப்பை: கோப்பையை தக்க வைத்த நாா்த் ஈஸ்ட் யுனைடெட்
டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹாா்பா் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது.
நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பை போட்டி கடந்த ஜூலை மாதம் தொடங்கி கொல்கத்தா, ஷில்லாங், ஜாம்ஷெட்பூா், கோக்ரஜாா் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. இது 134-ஆவது ஆண்டு போட்டியாகும்.
இந்நிலையில் கொல்கத்தாவின் விவேகானந்தா யுகபாரதி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட்-முதன்முறையாக இப்போட்டியில் களம் கண்ட டயமண்ட் ஹாா்பா் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே நாா்த் ஈஸ்ட் அணி கோல் போடும் முனைப்பில் இருந்தது. அஜாரி லாங் ஷாட் மற்றும் பாா்த்திவ் ஹெட்டா் டயமண்ட் ஹாா்பா் கோல்பகுதியைக்கு சென்று கோலாக மாறவில்லை.
14-ஆவது நிமிஷத்தில் டயமண்ட் ஹாா்பா் அணியின் லுகா மஜ்சென் அடித்த ஷாட் தவறியது. 28-ஆவது நிமிஷத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா்
சாம்டே அடித்த பாஸை பயன்படுத்தி முதல் கோலடித்தாா் பாா்த்திவ். இடைவேளையின்போது, பாா்த்திவ் மீண்டும் கோலடித்து 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.
50-ஆவது நிமிஷத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா் நுனஸ் கடத்தி அனுப்பிய பந்தை கோலாக்கினாா் தோய் சிங். 63-ஆவது நிமிஷத்தில் லியான்சங்காவின் பாஸை கோலாக்கினாா் குா்மீத் சிங்.
டயமண்ட் ஹாா்பா் ஒரே கோல்:
தொடா் கோல்களால் நிலைகுலைந்த டயமண்ட் ஹாா்பா் தரப்பில் 68-ஆவது நிமிஷத்தில் ஜோபி ஜஸ்டின் ஹெட்டா் மூலம் ஒரே கோலடித்தாா்.
85-ஆவது நிமிஷத்தில் நாா்த் ஈஸ்ட் வீரா் ஆன்டி கோலடிக்க 5-1 என முன்னிலை பெற்றது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் அஜாரி கடைசி கோலடித்தாா். இதன் மூலம் டயமண்ட் ஹாா்பரை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது நாா்த் ஈஸ்ட் யுனைடெட்.
25 ஆண்டுகளில் முதன்முறையாக பட்டத்தை தக்க வைத்த அணி என்ற சிறப்பையும் பெற்றது.
இதன் மூலம் ரூ.1.21 கோடி பரிசுத் தொகை நாா்த் ஈஸ்ட் அணிக்கு வழங்கப்பட்டது.