
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்து அணி நட்பு ரீதியான ஆட்டத்துக்கு கேரளத்திற்கு வருவது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பினை ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக கேரளத்தில் மிக அதிகமாக இருக்கிறார்கள்.
ஆர்ஜென்டீன அணி நட்பு ரீதியான போட்டிகளை வரும் நவ.10, 18ஆம் தேதிகளுக்கு இடையில் கொச்சியில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ஜென்டீன அணிக்கு லியோனல் ஸ்கலோனி பயிற்சியாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் மெஸ்ஸி கொல்கத்தாவிற்கு வந்து தனது 70 அடி உயர சிலையை திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் நவம்பரில் மெஸ்ஸியின் அணி கேரளத்தில் விளையாடுமெனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக ஆர்ஜென்டீன அணி 2011-இல் கொல்கத்தாவில் நட்பு ரீதியான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
2022 உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீன அணி அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
மெஸ்ஸியும் இன்டர் மியாமியில் சிறப்பாக விளையாடிவருவது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு கூறியதாவது:
ஆர்ஜென்டீன தேசிய அணி ஸ்கலோனி தலைமையில் இந்தாண்டு இரண்டு கட்ட நட்பு ரீதியான ஃபிஃபா போட்டிகளில் விளையாடும்.
முதலாவது கட்ட போட்டி அக்டோபரில் 6-14ஆம் தேதிகளில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.
இரண்டாவது கட்ட போட்டிகள் நவம்பரில் 10-18ஆம் தேதிகளில் அங்கோலாவின் லுவாண்டாவிலும் இந்தியாவின் கேரளத்திலும் விளையாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
எதிரணிகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.